ஒரு உண்மையான தீர்க்கதரிசியின் பாதை THE WAY OF A TRUE PROPHET 62-05-13 பிரான்ஹாம் கூடாரம், ஜெபர்ஸன்வில், இந்தியானா அமெரிக்கா 1. ''இஸ்ரவேல் - புத்திரரே, கர்த்தராகிய நான் எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணின முழு குடும்பமாகிய உங்களுக்கு விரோதமாய் சொல்லிய இந்த வசனத்தைக் கேளுங்கள்: பூமியின் எல்லா வம்சங்களுக்குள்ளும் உங்களை மாத்திரம் அறிந்துக் கொண்டேன்; ஆகையால் உங்களுடைய எல்லா அக்கிரமங்கள் நிமித்தம் உங்களைத் தண்டிப்பேன். இரண்டு பேர் ஒருமனப்பட்டு இருந்தாலொழிய ஒருமித்து நடந்து போவார்களோ-? தனக்கு இரை அகப்படாமலிருக்கக் காட்டிலே சிங்கம் கெர்ச்சிக்குமோ-? இரை பிடியாமலிருக்கும் போது பாலசிங்கம் தன் கெபியிலிருந்து சத்தமிடுமோ-? குருவிக்குத் தரையிலே சுருக்குப் போடப்படாது இருந்தால், அது கண்ணியில் அகப்படுமோ-? ஒன்றும் படாதிருக்கையில், கண்ணி தரையிலிருந்து எடுக்கப்படுமோ-? ஊரில் எக்காளம் ஊதினால் ஜனங்கள் கலங்காது இருப்பார்களோ-? கர்த்தருடைய செயல் இல்லாமல் ஊரில் தீங்கு உண்டாகுமோ-?' கர்த்தராகிய ஆண்டவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்கார ருக்குத் தமது இரகசியத்தை வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யார், சிங்கம் கெர்ச்சிக்கிறது, யார் பயப்படாதிருப்பான்-? கர்த்தராகிய ஆண்டவர் பேசுகிறார், யார் தீர்க்கதரிசனம் சொல்லாதிருப்பான்-? ஆமோஸ் -3 : 1-8. 2. சமாரியா பட்டணத்திற்கு சற்று அப்பாலுள்ள மலையின் மேல்.. அன்று காலை நேரத்தில் தீர்க்கதரிசியாகிய ஆமோஸ் நின்று கொண்டு, அப்பட்டணத்தைப் பார்க்கும் பொழுது கட்டாயமாக அவன் கண்கள் உபத்திரவத்திற்கு உள்ளாகி இருக்கக் கூடும், தன்னுடைய ஸ்திரமான கைகளினால் தன் தாடியை வருடிக் கொண்டு இருப்பதை என்னால் காண முடிகின்றது. அவனுடைய உடை முரட்டுத் தனமும், சடைப்பற்றுள்ள தாடியின் அமைப்பும் இன்றுள்ள நவீன சுவிசேஷ ஊழியர்களின் தன்மைக்கு எவ்வளவு வித்தியாசப்பட்டு இருக்கின்றது-! இந்த தீர்க்கதரிசி அலங்காரம் உள்ளவனாகக் காணப்படவில்லை. அவனிடம் காண்பதற்கு விரும்பத்தக்க அம்சம் ஒன்றுமில்லை. ஆனால் அந்த தேசத்திற்கு சொல்லத்தக்கதாக, கர்த்தர் சொல்லுகிறதாவது,'' என்கிற தேவ வார்த்தையைக் கொண்டவனாய் இருந்தான்.. கர்த்தர், அவனை சமாரியா பட்டணத்திற்கு அனுப்பினார். ஒரு வேளை இந்த தீர்க்கதரிசியின் பட்டணப் பிரவேசம், நமது நவீன சுவிசேஷப் பிரசங்கிகளுடைய தன்மைக்கு முற்றிலும் வேறுபட்டிருக்கக் கூடும். ஒரு எழுப்புதலுக்குத் தேவையான அம்சங்கள் என்னென்ன இருக்கவேண்டும் என்று நாம் நினைக்கின்ற காரியங்கள் ஒன்றும் அவனிடம் காணப்படவில்லை. அவன், ஒரு நவீன சுவிசேஷகனாய் காணப்படவில்லை, தற்கால முறைமைகளையும், கருவிகளை யும் குறித்து அவன் பொருட்படுத்தவில்லை. ஆனால் அவன் ''கர்த்தர் சொல்லுகிறதாவது,'' என்ற தேவனுடைய வார்த்தையை உடைய தீர்க்கதரிசியாய் இருந்தான். அவன் தன்னுடைய அலங்காரத்தைக் குறித்தோ, தலை முடியானது ஒழுங்காக வாரிவிடப்பட்டு இருக்கின்றதா என்பதைக் குறித்தோ, தான் புகழ்பட்ட வனாக இருக்கின்றானா, இல்லையா என்பதைக் குறித்தோ சிறிதேனும் பொருட்படுத்தவில்லை. அவன் கர்த்தருடைய வார்த்தையைக் கொண்டவனாய் இருந்து, அந்த வார்த்தையைக் கொண்டு வருவதில் நோக்கமாய் இருந்தான்; தன்னுடைய ஊழியத்தையும் தான் என்ன செய்கிறோம் என்பதையும் அவன் அறிந்திருந்தான், ஏனென்றால் அவன் ஒரு உண்மையான தேவனுடைய தீர்க்கதரிசியாய் இருந்தான். 3. கர்த்தருடைய வார்த்தை அவனிடத்தில் வந்ததின் காரணமாக அவன் சமாரியா பட்டணத்திற்கு வந்திருந்தான். கர்த்தருடைய வார்த்தை ஒரு உண்மையான ஊழியக்காரனுக்கு வரும் பொழுது அவன் கண்டிப்பாக செல்ல வேண்டியது அவசியமாய் இருக்கின்றது. சூழ்நிலை எப்படி இருந்தாலும், கஷ்டங்கள் இருந்தாலும், விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அவன் கட்டாயமாக செல்லத் தான் வேண்டி இருக்கின்றது. தேவன் பேசுகிறபடியால் அந்த செய்தியை அவன் சுமந்து செல்ல வேண்டியதாய் இருக்கிறது. பணம் சம்பாதிப்பதற்கோ, புகழை சம்பாதிப்பதற்கோ அவன் செல்லாமல், கர்த்தருடைய நாமத்தினால் அவன் செல்லுகின்றான். ஏனென்றால் அவன் கர்த்தரால் அனுப்பப்பட்டு அவருடைய ஊழியத்தை உடையவனாய் இருக்கிறான். தேவனுடைய வார்த்தையை அவன் சுமக்கின்றதால் அந்த வார்த்தையாகவே அவன் இருக்கின்றான், இதுவே ஒரு உண்மையான தீர்க்கதரிசியின் அடையாளம். இரண்டாவது, யெரோபெயாம் இராஜ்ஜியபாரம் செய்து கொண்டிருந்த நாட்களில், இந்த மகத்தான அஞ்சா நெஞ்சமுள்ள தேவ ஊழியக்காரன், ஏறத்தாழ 13 வருடங்கள் தீர்க்கதரிசனம் உரைத்தான். இந்த ராஜா, இஸ்ரவேலில் சில காலங்களுக்கு முன் காணப்பட்ட புத்திக் கூர்மையும், திறமைசாலியுமான ஒரு ராஜாவுக்கொப்ப அமைந்து இருந்தான், இவன் இஸ்ரவேல் தேசத்துக்கு செழிப்பைக் கொண்டு வந்தாலும் ஒரு விக்கிரக ஆராதனைக்காரனாக இருந்தான். 4. ஒரு மனிதன் எவ்வளவு தான் புத்திசாலியாய் இருந்தும், தேசத்திற்கு எவ்வளவு மிகுதியான செழிப்பைக் கொண்டு வந்தாலும், அவன் தேவனையும், அவரின் வார்த்தையையும் விட்டு விலகுவானானால், அந்த தேசத்திற்கு அவன் ஒரு கெடுதியானவனாய் காணப்படுவான். இது இன்றுள்ள நிலைமைக்கு ஏன் பொருந்தாது என்று நான் அதிசயிக்கிறேன். அநேகர் தாங்கள் எவ்வளவு திறமைசாலிகள் என்று காட்ட டெலிவிஷன் படக்காட்சிகளில் தோன்ற விருப்பம் கொள்கின்றார்கள். ஆனால் ''கர்த்தர் சொல்லுகிறதாவது,'' என்ற வார்த்தையை: விசுவாசிக்க அவர்களுக்குத் தெரியவில்லை. யெரோபெயாம் ஒரு புத்திசாலி தான். ஆனால் இஸ்ரவேல் தேசம் பின் மாற்றத்தில் காணப்பட்டது, இஸ்ரவேலின் போதகர்களும், வேதபாரகரும், அவருடைய அரசாங்கத்தின் அதிகாரிகளும் கூட கர்த்தருடைய வார்த்தையை விட்டு விலகி இருந்தார்கள், ஓ-! அவர்களெல்லாரும் தாங்கள் சாதிப்பது தான் சத்தியம் என்று இருந்தார்கள், மனுஷனுக்குச் செம்மையாய் தோன்றுகிற வழி உண்டு ; அதின் முடிவோ மரண வழிகள்' (நீதி, 14:12). அங்கு காணப்பட்ட எல்லா வேதபாரகரும், ஆயிரக்கணக்கான போதகர்களும், ராஜாக்களும், தேசாதிபதிகளும், தாங்கள் தேவனைத் தொழுகிறவர்கள் என்று சொல்லிக் கொண்டாலும், எல்லோரும் தவறாகவே காணப்பட்டார்கள், 5. அவர்களுடைய பெரிய தேவை, செழிப்பிற்காக ஒரு ராஜா அல்ல, ஒரு தீர்க்கதரிசி தான்; ஏனென்றால் தேவனுடைய வார்த்தையும், அதின் வியாக்கியானமும் ஒரு உண்மையான தீர்க்கதரிசிக்கு வருகிறது. சில சமயங்களில் அவனுடைய வழி ஆனது முரட்டுத்தனமாய் காணப்படும் பொழுது எல்லா குருக்களும், போதகர்களும், ஏன் அரசாங்கமும் கூட, அவனுக்கு எதிராக வருவதை நீங்கள் காணலாம். இருந்தாலும், கர்த்தருடைய வார்த்தை தீர்க்கதரிசி இடத்திற்கு மட்டும் தான் வருகின்றதாய் இருக்கின்றது (ஆமோஸ். 3:7). மற்ற எல்லோரும் பெரும்பாலும் அதே தேவ வார்த்தையைக் கொண்டிருந்தாலும், தீர்க்கதரிசி தேவனுடைய வார்த்தையை பேசுகிறான்; தேவன் அதை நிரூபித்து, வார்த்தையானது அவனில் உள்ளது என்பதைக் காண்பிக்கின்றார். இஸ்ரவேலர் தாங்கள் ஒரு போதும் கொண்டிராத அளவுக்குப் பெரிய கட்டிடங்களையும், ஸ்தாபிக்கப்பட்ட மதக்கொள்கைகளையும் உடையவர்களாய் இருந்தனர், பலிபீடங்கள் எல்லா இடங்களிலும் காணப்பட்டன. இருந்தாலும், அவர்கள் தேவனுடைய வார்த்தையினின்று பல கோடி மைல்கள் தூரத்தில் காணப்பட்டார்கள். இந்த காட்சி இன்றைய நிலைக்கு வெகுவாக பொருந்துகிறது என்று நான் நினைக்கின்றேன். ஆமோஸின் புத்தகத்தை வாசித்துப் பாருங்கள். எல்லாக் குருக்களும், அரசாங்க அதிகாரிகளும் தேவனுடைய வார்த்தையை விட்டு விலகி விட்டார்கள். ஆமோஸ் 2-ம் அதிகாரம் 4-ம் வசனத்தைப் படிப்போமாக: ''மேலும் யூதாவின் மூன்று பாதகங்களினிமித்தமும், நாலு பாதகங்களினிமித்தமும் நான் அவர்கள் ஆக்கினையைத் திருப்ப மாட்டேன்; அவர்கள் கர்த்தருடைய வேதத்தை வெறுத்து, அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளாமல், தங்கள் பிதாக்கள் பின்பற்றின பொய்களினால் மோசம் போனார்களே.'' 6. அவர்கள் வேதத்தை வெறுத்து, அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளாமற் போனார்கள். இருந்தும் தாங்கள் அதில் நிலை நிற்பதற்காக கருதினார்கள். அவர்களின் சொந்தப் பெயர்கள், அவர்களை தவறாக நடக்கப் பண்ணின, வார்த்தையையும் வேத எழுத்துக்களையும் அவர்கள் உடையவர்களாய் இருந்தாலும், பொய்கள் அதனுடன் கூட்டப்பட்டதினால் அவர்கள் தவறு செய்வ தற்கு ஏது உண்டாயிற்று. தேவனுடைய வார்த்தைக்குத் தங்களின் சொந்த அபிப்பிராயங்களையும், வியாக்கி யானங்களையும் அவர்கள் கொடுத்த பொழுது தவறுதலுக்கு உள்ளானார்கள், இன்றைக்கு உள்ள நிலைமையும் அவ்விதமே உள்ளது. அநேகர் தங்கள் சொந்த வியாக்கியானங்களை தேவனுடைய வார்த்தைக்குக் கொடுக்க விரும்புவதால் அவைகள் நம்மை ஒரு குழப்பத்திற்குள்ளாக அழைத்து செல்கின்றன. தேவன் இடத்திலிருந்து எப்பேர்ப்பட்ட ஒரு கடிந்துக் கொள்ளுதலை, இந்த தீர்க்கதரிசி கொண்டு வந்தான்-! 7. ஆமோஸ் தேவனுடைய ஒரு உண்மையான தீர்க்கதரிசியாய் இருந்தான். ஆமோஸைக் குறித்துப் படிக்கும் மனிதன், அவன் எவ்விதம், ஒரு பயமற்ற தேவனுடைய மனிதனாயிருந்தான் என்பதை அறிந்துக் கொள்ளலாம். சிறிய தீர்க்கதரிசிகளில் ஒருவனாக ஆமோஸ் கருதப்பட்டான், ஏனென்றால் இந்த சூழ்நிலையில் அவன் அதிக காலம் தரித்திருக்கவில்லை. ஆனாலும் நிச்சயமாக, அவன் கோடாரியை மரத்தின் வேர் அருகே செலுத்தினான். பயமற்ற அநேக தீர்க்கதரிசிகளில் - அவன் ஒருவனாகக் கருதப்பட்டான். அபிஷேகத்தினால் நிறைந்து கர்த்தர் சொல்லுகிறதாவது,'' என்ற வார்த்தையையுடையவனாக அவன் வந்தான். தான் என்ன பேசுகிறான் என்பதை அவன் அறிந்திருந்தான். ஏனென்றால் தேவனுடைய வார்த்தைக்குரிய உண்மையான வியாக்கியானத்தை மக்களுக்கு கொண்டு வரத்தக்கதாக தேவனுடைய அபிஷேகம் அவன் மேலிருந்தது. வனாந்தரத்திலுள்ள நாட்டுப்புறம் தான் அவனுடைய ஊர். அங்கிருந்து தான் அவன் வந்தான். அங்கு அவன் ஜெபத்தில் தரித்திருக்கும்போது தேவன் அவனை சந்தித்து, அவன் ஒரு அங்கமாக இருக்கும் அந்த அலங்காரப் பட்டணத்தின் பொல்லாத் தனத்தை அவனுக்கு கூறினார். இப்பொழுதோ, அவன் தலை நகரமாகிய சமாரியா பட்டணத்தைப் பார்த்த வண்ணமுள்ள அந்த மலையினிடத்தில் வந்து விட்டான். 8. தன்னுடைய அநாகரீகமான நாட்டுப்புற உடைகளோடு அங்கு அவன் நின்று கொண்டிருந்தான். ஒரு வேளை , அவன் பாதங்கள் அழுக்கும் சேறும் படிந்ததாய் காணப்பட்டிருக்கலாம். இன்றைய நாளில் காணப்படும் குளிக்கும் தொட்டிகள் போன்ற வசதிகள் அந்நாட்களில் இல்லாமலிருந்ததால் அவன் குளித்து அனேக நாட்கள் ஆயிருக்கலாம். ஆனால் அது அவனுடைய உள்ளான மனிதனை ஒரு போதும் பாதிக்காது, இன்றைய உலகில் வெளிப் பிரகாரமான மனுஷனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது, ஆனால் உள்ளான மனுஷனுக்கோ அவ்விதம் கொடுக்கப்படுவது இல்லை. நாம் தினந்தோறும் குளித்திருக்கிறோமா, தலை மயிரானது ஒழுங்காக வாரிவிடப்பட்டிருக்கின்றதா, புதிய சுத்தமான வஸ்திரம் அணிந்திருக்கிறோமா , என்றெல்லாம் வெளிப் பிரகாரமான மனுஷனுக்காக அதிக அக்கரை காட்டுகின்றோம். ஆனால் உள்ளான மனுஷனைப் பற்றியோ நாம் கவலை கொள்வதில்லை பழைய பாவம் நிறைந்த ஆடைகளை அணிந்தவர்களாய் சமயக் கோட்பாடுகளாலும், நியம விதிகளாலும் ஆத்துமாவை துர் நாற்றம் வீசச் செய்து, இவைகளை ஒரு போதும் ஆராய்ந்து பார்க்காமலும் உலகத்தின் காரியங்களினின்று விடுபடத்தக்கதாக தேவனுடைய வார்த்தையாகிய சுத்த ஜலத்தினால் கழுவப்படாதவர்களாயும் காணப்படுகின்றோம். 9. நவீனக் காரியங்களால் நிறைந்து அலங்காரமாய் காணப்பட்ட சமாரியா பட்டணத்தை மலையின் மேல் நின்று கொண்டு தீர்க்கதரிசியானவன் அன்று காலை காண்கின்றான். இஸ்ரவேலர் இவ்விதமாக ஒரு முன்னேற்றத்தில் இருப்பார்கள் என்று அவன் கனவிலும் நினைக்கவில்லை. சுற்றிலுமுள்ள எல்லா நாடுகளோடும் அவர்கள் கூட்டு சேர்ந்திருந்தார்கள். அவர்களின் பெண்கள் நவீன நடைக்கேற்ப ஆடை அணிந்திருந்தார்கள். அவர்களுடைய ஆண்கள் உல்லாசப் பிரியராய் தங்கள் மாமிசத்தை திருப்தி செய்ய எந்தக் காரியத்தையும் செய்கிறவர்களாக காணப்பட்டார்கள். இவைகளை தீர்க்கதரிசி கண்ட போது அவனுடைய கண்கள் சங்கடப்பட்டதற்கு ஆச்சரியமில்லை. இன்று சில. சுற்றுலாக் காரர்கள் நியூயார்க், லாஸ்-ஏன்ஜெலிஸ் போன்ற பட்டணங்களுக்கு வரும் போது அவர்கள் கண்கள் ஆச்சரியத்தால் விரிவது போன்று தீர்க்கதரிசியின் பார்வை அமையவில்லை. சில நாட்களுக்கு முன், எனது நண்பர்களில் சிலர், ஒரு பிரசித்திப் பெற்ற வேதாகமப் பள்ளிக்கருகில் மீன் வேட்டையாடி திரும்புகையில், அங்கு சாலை ஓரத்திலுள்ள நாணற்தட்டைகளின் மேல், வாலிபப் பெண்களும், ஆண்களும் அரை நிர்வாணமாக படுத்துக் கொண்டு, குடித்துக் கொண்டு இருப்பதைக் கண்டார்கள். ஒரு வேளை அவர்கள் அந்த வேதாகமப் பள்ளியின் மாணாக்கர்களாகவும் கூட இருக்கலாம். எவ்வளவு அருவருப்பாயுள்ளது பாருங்கள்-! தங்களைக் கிறிஸ்தவர்களென்று கூறிக் கொள்ளும் அநேக உலகமக்களுக்கு இவ்வித நடத்தைகள் உற்சாக மூட்டுவதாய் இருக்கின்றன. ஒரு வேளை இதை அவர்கள் உணராமல் இருக்கலாம். ஆனால், தேவனுடைய நீதியை அவர்கள் நிந்திக்கிறவர்களாய் இருக்கிறார்கள். நான் விமானத்தில் பிரயாணம் செய்யும் பொழுது சிலக் காரியங்களை கவனித்து இருக்கிறேன். லாஸ் ஏன்ஜெலிஸ் போன்ற பெரிய பட்டணத்திற்கு ஜனங்கள் வரும் பொழுது அவர்கள் தங்கள் முகத்திற்கு சாயம் பூசியும், தங்களை அழகுப்படுத்தியும் கொள்கின்றார்கள். அந்தப் பட்டணமானது தாங்கள் எப்பொழுதும் பார்த்திராத அலங்காரமானதொரு பட்டணம் என்று நினைத்துக் கொள்கின்றார்கள். ஆகவே, அப்பட்டணத்திற்குள் சென்று எவ்வளவு இறுக்கமாக தங்கள் ஆடையை அணிய முடியுமோ அவ்விதம் அணிந்து, அங்கு தெருக்களில் நடனமாட விரும்புகிறார்கள். இவ்விதமான செய்கைகள் மிகவும் அற்புதம் என்றும் நினைக்கிறார்கள். 10. தேவனால் அபிஷேகம் பண்ணப்பட்ட தீர்க்கதரிசியான ஆமோஸின் கண்கள் சமாரியா பட்டணத்தின் அலங்காரத் தன்மையைப் பார்த்து ஆச்சரியப்படவில்லை. மாறாக தாங்கள் தேவனால் ஆசீர்வதிக்கப்பட்ட ஜனம் என்று கூறிக் கொண்டவர் களின் நல்லொழுக்க சிதைவை கண்டு சங்கடப்பட்டன. அவனுடைய கண்கள் அவர்களின் அநாகரீகத்தையும், நல்லொழுக்கம் இன்மையையும் கண்டன. ஆகவே தான் தீர்க்கதரிசி, 'சிங்கம் கெர்சிக்கின்றது, யார் பயப்படாதிருப்பான்-? கர்த்தராகிய ஆண்டவர் பேசுகிறார், யார் தீர்க்கதரிசனம் சொல்லாதிருப்பான்-?'' (ஆமோ.3:8) என்று கூறியதற்கு எந்தவித ஆச்சரியமுமில்லை. இந்த நல்லொழுக்கம் இன்மையையும், கெட்ட தன்மைகளும் தீர்க்கதரிசியைக் கவரவில்லை. ஆனால் அவைகள் அவன் ஆத்துமாவை வியாதிக்குள்ளாக்கிற்று. ஏன்-? அவன், தன் தேவனை அறிந்தும், தேவன் ஆசீர்வதிக்க என்ன வாக்குத்தத்தம் செய்திருக்கிறார் என்பதையும் அறிந்திருந்தான். ஆனால் பிசாசோ எல்லாக் காரியங் களையும் தாறுமாறாக்கி இருந்தான். ஆகவே, உண்மையான ஆசீர்வாதத்திற்கு பதிலாக நல்லொழுக்க சிதைவும், கெட்ட நடத்தைகளும், மனந்திரும்பாத ஜனங்களின் கண்களுக்கு உற்சாகத்தையும், ஆசையையும் ஊட்டுவதாயிருந்தன. இந்த நாட்களுக்கு இது எவ்விதம் ஒத்ததாயிருக்கின்றது-! பிரசங்கிகள் பிரசங்கப் பீடத்தினின்று பாவத்தையும், நல்லொழுக்கம் இன்மையும் பார்க்கின்றார்கள். அங்கத்தினர்கள் பாவத்தில் ஜீவித்தாலும் அவர்கள் தங்கள் சபையையோ அல்லது ஸ்தாபனத்தையோ சார்ந்தவர்களாய் இருப்பதால் அவர்களை ஆசீர்வதிக்கவும் செய்கிறார்கள். இது என் ஆத்மா விளங்கிக் கொள்ளக் கூடாத அளவிற்கு மிகையானதாய் இருக்கின்றது. தேவன் பேசும் போது நம்மால் எவ்விதம் அமைதலாய் இருக்க முடியும்-? 11. ஒரு உண்மையான தீர்க்கதரிசியை தேவனுடைய ஆவி சந்திக்கும் பொழுது அவன் தேவனுடைய வார்த்தையைக் கொண்டு அறை கூவுவான். நான் ஒரு குற்றமும் கண்டுபிடிக்கிறவனாக இருக்க விரும்பவில்லை. ஆனால் இவைகளைப் பார்த்தும் ஒருவன் எவ்விதம் சமாதானமாயிருக்க முடியும்-? ஒருவன் தன்னை தேவனுடைய ஊழியக்காரன் என்று அழைத்துக் கொண்டு இவ்விதமான காரியங்களைப் பார்த்து எவ்வாறு அதை தாங்கிக் கொள்பவனாயிருக்கக் கூடும்-? அதற்கு எதிராக அறை கூவாமல் எப்படி இருக்க முடியும்-? ஒரு ஸ்தாபனமோ, அல்லது ஒரு சபையோ என்ன கூறும் என்பதைக் குறித்து எனக்கு கவலையில்லை. அந்தக் காரணத்தினால் தான் அவைகள் ஓன்றிலும் நான் சார்ந்து இருக்கவில்லை. முதலாவது அவர்கள் செய்யும் காரியம் உன்னை புறம்பாக்குவது தான். தேவனுடைய வார்த்தையே முக்கியத்துவம் வாய்ந்தது. நீ தேவனால் அனுப்பப் பட்டவனாய் இருப்பாயானால், சொல்வதற்கென்று உன்னிடத்தில் ஒரு செய்தி உண்டாகி இருக்கும். ஆனால், நீ தேவனுடைய வார்த்தைக்கு முரணான காரியங்களைச் சொல்வாயானால், நீ தேவனால் அனுப்பப்பட்ட தூதனாய் இருக்க முடியாது. மாறாக ஒரு ஸ்தாபனத்தின் சொந்தக் கொள்கையையும், கோட்பாடையும் உடைய உடன்படிக்கையின் தூதனாயிருப்பாய். தேவனால் அனுப்பப்படுகின்ற மனுஷன் தேவ வார்த்தையை உடையவனாயிருப்பான். ஆமோஸ் ஒரு உண்மையான தீர்க்கதரிசியாய் இருந்ததால், தேவ வார்த்தையை தன்னகத்தே கொண்டு இருந்தான். 12. தான் கண்ட காரியங்களினால் ஆமோஸ் மகிழ்ச்சியடைவில்லை. அவன் நகரத்தைப் பார்ப்பதினின்று தன் கண்களை விலக்கி, தன் தலையை பலமாக அசைத்துக் கொண்டான். தன் சட்டையை எடுத்து முகத்தில் படிந்திருந்த அழுக்கையும் வியர்வையையும் துடைத்தான். தகிக்கின்ற சூரியன் அவன் தலைக்கு மேல் பிரகாசித்துக் கொண்டிருந்தது. அந்தப் பட்டணத்தின் பாவங்கள் அவனை வியாகுலம் உள்ளவனாக்கிற்று.' ''நான் ஒரு இஸ்ரவேலன். பார் , என் தேசம் எவ்வளவாய் செழித்திருக்கிறது'' என்று ஆமோஸ் ஏன் சொல்லியிருக்கக் கூடாது என்று ஒரு வேளை நீ அதிசயிக்கலாம்-! ஒரு உண்மையான தீர்க்கதரிசியாக ஆமோஸ் இருக்கும்பொழுது எப்படி அவ்விதம் அவனால் சொல்லக்கூடும்-? அங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்றும் அதினால் விளையும் தீமைகள் என்னவென்றும் ஆமோஸ் அறிந்திருந்தான். தீர்க்கதரிசியான ஆமோஸ், கிறிஸ்தவர்கள் என்று கூறிக் கொள்ளும் நம்மையும், நம் பட்டணங்களையும் இன்று நோக்கிப் பார்க்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அமெரிக்க ஐக்கிய நாடுகளிலுள்ள எந்தப் பட்டணத்திலுமுள்ள கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் ஜனங்களையும், உலகத்திலுள்ள எந்த பாகத்தையும் தீர்க்கதரிசி நோக்கிப் பார்க்கட்டும். அப்பொழுது அவனுடைய அபிஷேகிக்கப்பட்ட கண்கள் திரும்பவும் சங்கடத்திற்கு உள்ளாகும். அவனுடைய கைகள் அவன் தாடி மயிரைப் பிய்த்துக் கொள்ளும். ஏன்-? உலகம் பார்க்கின்ற விதமாய் அலங்காரத் தையும், செழிப்பையும் தீர்க்கதரிசி பார்க்கிறதில்லை, அவனுடைய கண்கள் தேவனை விட்டு பின்வாங்கி செல்லும் தன்மையையே கவனித்து பார்க்கிறது. தேசத்தினுடைய பின்மாற்றத்தையும், சபைகளின் ஒழுங்கீனங்களையும் அவை நோக்கிப் பார்க்கின்றன. இவ்விதமான காரியங்களை தூள்தூளாக கிழித்துப் போடுவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்-? 13. ஒரு அத்தியட்சகுரு தீர்க்கதரிசியை சமாரியா மலையின் மேல் சந்தித்து, 'நீ தேவனுடைய தீர்க்கதரிசியா-? நல்லது, அப்படி ஆனால் நீ என்ன சொல்ல வேண்டும் என்றும் என்ன சொல்லக் கூடாதென்றும் நாங்கள் உனக்கு போதிப்போம்,'' என்று கூறினால், தீர்க்கதரிசி அந்த சத்தத்திற்கு செவி கொடுப்பான் என்று நினைக்கின் றாயா-? மேலும், ஒரு அத்தியட்சகுரு தீர்க்கதரிசியினிடம், ''எங்கள் ஸ்தாபனத்தில் வந்து சேர்ந்து விடு. அப்பொழுது உன்னுடையக் கூட்டங்களுக்கு நாங்கள் உதவி செய்வோம்,'' என்று கூறினால், இந்த சத்தத்திற்கும் அவன் செவி கொடுப்பான் என்று நினைக்கின்றாயா-? இல்லை. என்னால் அப்படிக் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியவில்லை. அவன் தேவனால் அனுப்பப்பட்ட மனிதன், அவர்களுடைய கூட்டும், ஒத்துழைப்பும் அவனுக்கு அவசியமில்லை. அவன் இடத்தில் தேவ வார்த்தையும், அபிஷேகமும், தேவ நியமனக் காலமும் உண்டு. அவன் கர்த்தர் சொல்லுகிறதாவது'' என்ற வார்த்தையை உடையவனாய் வருகிறான். இந்த மார்க் கமாய் தான் அவன் பிரயாணம் செய்கின்றான். இவனே ஒரு உண்மையான தீர்க்கதரிசி. தன்னிலே தானே அழகுள்ளதும், அலங்காரமுமான சமாரியா பட்டணமும், அதன் உயர் கல்விப்பெற்ற இஸ்ரவேலரும், அருமையாக மினுக்கப்பட்ட பிரசங்கிகளும், போதகர்களும் இந்த முகமறியாத் தீர்க்கதரிசியான சிறிய மனிதனை ஏற்றுக் கொண்டு இருந்து இருப்பார்களா-? ஒரு வேளை அவனுடைய மொழியின் இலக்கணம் சரியில்லாமல் இருந்திருக்கலாம், வனாந்தரத்திலுள்ள ஒரு ஏழ்மை யான குடும்பத்தினின்று அவன் வந்தான், அங்கிருந்து தேவனையும் தேவனுடைய வார்த்தையைப் படிக்கவும், அவனுடைய காலத்தின் தீர்க்கதரிசியாகவும் இருக்கத் தக்கதாக அவன், தேவனால் அழைக்கப்பட்டிருந்தான், தீர்க்கதரிசிகள் அந்தந்த காலத்தின் தூதர்களாகப் பிறக்கின்றார்கள். தேவன் தம்முடைய அநாதி தீர்மானத் தின்படி அந்தந்த காலத்தை அறிந்தவராய் தம்முடைய தீர்த்கதரிசியை பாவத்திற்கு விரோதமாய் போராடத்தக்கதாக நியமிக்கிறார். 14. அந்த அலங்காரமானப் பட்டணம் தீர்க்கதரிசியை ஏற்று கொண்டிருந்திருக்குமா-? அதனுடைய பெண்களும், ஆண்களும், போதகர்களும் அவன் என்ன கூறுகிறான் என்பதை கவனித்துக் கேட்டிருந்திருப்பார்களா-? இல்லை, நிச்சயமாக இருந்திருக்க முடியாது. எந்த ஒரு ஸ்தாபனத்தின் சிபாரிசையும் அவன் தன்னுடன் கொண்டு வரவில்லை. பரிசேயர்களோ அல்லது சதுசேயர்களோ தன்னை அனுப்பினார்கள் என்று அவன் கூறவில்லை. எந்தவித உறுதிப் பத்திரங்களையோ (credentials) அல்லது ஒரு கூட்ட ஐக்கிய அடையாள சீட்டையோ அவன் தன்னுடன் சுமந்து வரவில்லை. தன்னுடன் கூட்டத்திற்கு ஆயத்த ஒழுங்குகள் செய்ய முன்னோடிகள். அவனுக்கு இருந்ததில்லை. அவனுடைய கூட்ட ஒழுங்கிற்காக, பரிசேயரும், உயர் மட்ட ஆலோசனைக் குழுக்களின் ஆலோசனைகள் ஒன்றும் நடை பெறவில்லை. ஆமோஸ் அவர்களுக்கு முகம் அறியாதவனாய் இருந்தான். ஐக்கிய சீட்டோ, உறுதிப்பத்திரமோ, சிபாரிகளோ எதுவும் அவனிடமில்லை. ஆனால் ஒன்று மாத்திரம் அவனிடம் இருந்தது. அது தான் ' கர்த்தர் சொல்லுகிறார்'' என்ற வார்த்தை. . ''கர்த்தர் சொல்லுகிறார்'' என்ற வார்த்தை, மனித யோசனைகளின்படி உண்டான முன்னேற்ற திட்டங்களுக்கு முற்றிலும் வேறுபட்டதாயிருந்தது. இந்த வார்த்தை அவனுக்கு போதுமானதாய் இருந்தது. ஒரு வேளை அவன் எல்லோரும் வருகின்ற சம்பிரதாய முறைப்படி வந்திருப்பானாயின், ஓரு சபையின் பேரால் மட்டுமே வந்திருக்க முடியும். ஆனால் அவனோ கர்த்தருடைய நாமத்தினால் வருகை தந்தான். ஒரு உண்மையான தீர்க்கதரிசி எப்பொழுதும் கர்த்தருடைய நாமத்தினால் வருகிறவனாய் இருக்கின்றான். தன்னை நிரூபிப்பதற்கு ஆமோஸ் ஐக்கிய அடையாளச் சீட்டுகளை காண்பிக்க வில்லை. ஆனால் அவனிடம் கர்த்தருடைய வார்த்தை இருந்தது. அந்த வார்த்தையையே ஜனங்களுக்கு அறிவிப்பதற்காக அவன் அனுப்பப்பட்டான். தங்களுக்கு உள்ளாக ஜனங்கள் ஸ்தாபனங்களையும், வேறுபட்ட கூட்டங்களையும் அமைத்துக் கொண்டார்கள். தீர்க்கதரிசியான ஆமோஸ், அவ்விதமான தொடர்புகள் எதையும் உடையவனாக இல்லை. 15. அந்த ஓய்வு நாளின் காலையிலே அந்த இஸ்ரவேல் போதகர்கள் ஒரு சிறிய ஆராதனை செய்திருப்பார்கள் என்று நான் யூகிக்கின்றேன். ஒரு ஜெபமும், மோசேயும், மற்ற தேவ மனிதர்களும் எவ்விதம் ஜீவித்தார்கள் என்பதைக் குறித்தும் சிறிது நேரம் அவர்கள் பேசினார்கள். ஆனால், அவ்வித காலமெல்லாம் கடந்து சென்று விட்டது, அப்படிப்பட்ட அற்புதங்களும், அடையாளங்களும் இந்நாளுக்கு உரியதல்ல, இன்று நமக்கென்று தேர்ந்து எடுக்கப்பட்டிருக்கும் புதிய தலைவரைப் பாருங்கள். நம்முடைய புதிய அரசாங்கமும், மற்ற எல்லாத் திட்டங்களையும் கவனித்துப் பாருங்கள்,'' என்பதான சில காரியங்களை பேசி, பின்பு தங்கள் வீடுகளுக்கு சென்றிருப்பார்கள் என்றும் நான் ஊகிக்கிறேன். ஆனால் அங்கு ஒருவன் அவர்கள் மத்தியில் வந்தான். அவன் இது போன்ற உலகக் காரியங்களுக்காக கவலை கொள்ளவில்லை. “கர்த்தர் சொல்லுகிறதாவது'' என்ற வண்ணமாய் அவன் வந்தான். இதுவே ஒரு உண்மையான தீர்க்கதரிசியின் வழி. அவனுக்கு பூலோகத்தில் எந்தவிதமான ஒத்துழைப்பும் காணப்படவில்லை. அவனுக்கு முன்பாக என்ன வைத்திருக்கிறது என்பதை அவன் அறிந்தவனாய் இருந்தான், ஒவ்வொரு மனிதனும் அவனை எதிர்ப்பான் என்றும் எல்லோராலும் புறம்பாக்கப்படுவான் என்றும் அவன் அறிந்தவனாய் இருந்தான். ஆனால் கர்த்தருடைய நாமத்தினாலே அவன் அவர்களிடம் வந்தான். இயேசுவும் கூட தாம் கல்வாரி சிலுவையை சந்திக்க வேண்டும் என்று அறிந்தவராயிருந்தார் . ஆயினும் அவர் கர்த்தருடைய நாமத்தினால் வருகை தந்தார். 16. அந்த நாட்டிற்கு கொடுக்கத்தக்கதாக கர்த்தருடைய வார்த்தையை ஆமோஸ் உடையவனாய் இருந்தான். ஆனால் தேவ வார்த்தையைக் கொண்டிருக்கிறோம் என்று நினைத்துக் கொண்டிருந்த அந்த மக்களுக்கு உண்மையான கர்த்தருடைய வார்த்தை ஒரு அந்நியக் காரியமாக காணப்பட்டது. இதை நீ அறிந்துக் கொள்வாய் என்று நான் நம்புகிறேன். அந்த ஜனங்கள் தாங்கள் ஒரு பக்தி வைராக்கியமுள்ள ஜனக்கூட்டம் என்று புனிதமாக நினைத்துக் கொண்டிருந்தாலும், உண்மையான தேவ வார்த்தை அவர்களுக்கு ஒரு அந்நியக் காரியமாக காணப்பட்டது, அப்படித் தான் இன்றும் உள்ளது. வெளிப்படுத்தப்பட்ட உண்மையான தேவ வார்த்தை அநேக ஜனங்களுக்கும், சபை அங்கத்தினர்களும், கிறிஸ்தவர்களுக்கும் ஏன், தங்களை பரிசுத்தக் கூட்டம் (Holiness Group) என்று அழைத்துக் கொள்பவர் களுக்கும் கூட ஒரு அன்னியக் காரியமாக காணப்படுகின்றது. தேவ வார்த்தையின் உண்மையான வியாக்கியானமும், நிபந்தனைகளும், சாபங்களும், ஆசீர்வாதங் களும் ஜனங்களுக்கு ஒரு அன்னிய காரியங்களாக காணப்படுகின்றன. அவர்கள் அதை அறிவதில்லை; சத்தியங்களை அவர்களுக்குப் பிரசங்கியுங்கள், அவைகளை அவர்கள் ஒரு போதும் கேட்டு அறிந்ததில்லை என்பார்கள். இருந்தாலும் அவர்கள் ஸ்தாபனங்கள் வளர்ந்து செழித்து, ஒவ்வொரு வருடமும் அங்கத்தினர்களால் விருத்தி அடைவதால், அதிகமான கிளை ஸ்தாபனங்களும், தோற்றுவிக்கப்படுகின் றன. ஏதாவது ஒரு சத்தியம் வருவதென்றால் அது கட்டாயமாக தங்கள் ஸ்தாபனக் கூட்டத்தினின்று தான் வர வேண்டும் என்று அவர்கள் நினைக்கின்றார்கள். 17. ஆமோஸை அன்றிருந்த சபைகள் நிச்சயமாக ஏற்றுக் கொள்ளவில்லை. அது போலவே இன்றும் தேவனுடைய தீர்க்கதரிசி ஜனங்களால் ஏற்றுக் கொள்ளப் படுவதில்லை. தேவன் தமக்கென்று உண்மையான தீர்க்கதரிசிகளை கல்லுகளில் இருந்தும் உண்டாக்க வல்லவர் என்பதை அந்த ஜனங்கள் அதிகமாக மறந்து போனார்கள். ஒரு காட்டு மனிதனை தனக்கென்று எழும்பச் செய்ய தேவன் வல்ல வராய் இருக்கின்றார். அதுமட்டுமல்ல, அவருடைய நாமத்தினால் கூறப்படும் தேவ வார்த்தைக்கும், தீர்க்கதரிசனங்களுக்கும் நிற்கத்தக்கதாக மனிதரை கல்லுகளினால் உண்டாக்க அவர் வல்லவராய் இருக்கின்றார். ஒரு உண்மையான தீர்க்கதரிசி கோடாரியை மரத்தின் வேரில் நிச்சயமாக வைப்பவனாக இருந்து, சிறாய்கள் எங்கெங்கு விழவேண்டுமோ, அங்கங்கு விழும்படி செய்கின்றான். இதினிமித்தம் தனக்கு மற்றவர்களோடு ஐக்கியம் இருக்குமோ இருக்காதோ என்பதைப் பற்றி அவன் கவலைப்படுவதில்லை. இதுவே ஒரு உண்மையான தீர்க்கதரிசியின் பாதை. தீர்க்கதரிசியின் காரியங்களெல்லாம் இலகுவாயிருக்கின்றன என்று சில ஜனங்கள் நினைக்கின்றார்கள். தாங்கள் பேசுவது இன்னதென்று அவர்கள் அறியாது இருக்கின்றார்கள். ஒரு அழகான குதிரையோடு அருமையான இரதம் பூட்டி அதில் தீர்க்கதரிசியை அமரச் செய்து அவ்விதமாக அவன் நகரத்திற்குள் கொண்டு வரப்படவில்லை; அல்லது அதிகப் பட்டங்கள் பெற்ற மேன்மை தங்கிய போதகர்கள் அங்கே நின்று கொண்டு, ''மதிப்பிற்குரிய பரமார்ந்த வித்தியா மேதாவியான இன்னார் வருகிறார்,' என்று பணிந்துக் கொண்டு தீர்க்கதரிசியை அழைக்கவில்லை. அப்படி இருந்திருப்பின் அது ஒரு ஸ்தாபனத்திற்கேற்ற அமைப்பாய் இருந்து இருக்கும். பரலோகத்தின் ராஜா தாழ்மையை தெரிந்துக் கொண்டது போல தீர்க்கதரிசியின் வழியும் இருந்தது. இயேசு மாட்டுத் தொழுவத்திலுள்ள ஒரு முன்னணையில் வந்தார். அவர் மகிமையோடும், ராஜப்பிரதாபத்தோடும் முன்னணையில் தாழ்மையின் ரூபமாகப் பிறந்தார். 18. ஆமோஸ் தேவனுடைய வார்த்தையை மட்டும் உடையவனாக வரவில்லை. அந்த வார்த்தையாகவே அவன் வந்தான். எந்த ஒரு தேவ வார்த்தையும் தேவனாகவே இருக்கின்றது. நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா-? நான் உங்களுடனே சொல்லுகிற வசனங்களை என் சுயமாய் சொல்லவில்லை, என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவான வரே இந்தக் கிரியைகளைச் செய்து வருகிறார் (யோவான் 14:10) என்று இயேசு கூறினார். ஆமோஸ் தேவனுடைய வார்த்தையாகவே அந்த வீதியில், நடந்து வந்தான், அவன் முரட்டு லட்சணமுடையவனாகவும், உலகத்தின் நாகரீகத்திற்கேற்ப உடை அணியாதவனாகவும் இருந்தான். ஆனால் தேவ ஆவியின் வல்லமையோடு அவன் வந்தான். தேவனுடைய வார்த்தை அந்த வழியாகத் தான் வருகின்றதாய் இருக்கின்றது. ஸ்தாபனங்களின் கொள்கையின் வழியிலோ, பிரசங்கப் பீடத்தினின்று மழுமழுப்பான பிரசங்கங்கள் வாயிலாகவோ தேவனுடைய வார்த்தை வருவதில்லை. ஆனால் உலகத்திற்கும் அதிலுள்ள மக்களுக்கும் அது தேவனுடைய ஆவியின் வல்லமையினால் தேவனை வெளிப்படுத்தி காண்பிக்க வருகின்றதாய் இருக்கின்றது. ஸ்தாபனங்களுக்கும் தேவனுடைய வழிக்கும் உள்ள வேறுபாடு பெரிதாய் இருக்கின்றது. தேவன் கல்லுகளினால் உண்மையான தீர்க்கதரிசிகளை எழுப்ப வல்லவராய் இருக்கிறார் என்பதை நாம் அறிந்திருந்தாலும் அதியிலகுவாய் அதை மறந்து போகின்றோம், தீர்க்கதரிசிகள் ஸ்தாபனங்களின் வாயிலாக வருவதில்லை. ஒரு காரியம்-! ஸ்தாபனம் உண்மையான ஒரு தீர்க்கதரிசியை எழுப்ப முடியாது அப்படி முடியுமாயின், அவன் ஒரு ஸ்தாபன தீர்க்கதரிசியாய் மட்டுமே இருக்க முடியும், தேவன் தான் உண்மையான தீர்க்கதரிசியை எழுப்புகிறவராய் இருக்கிறார். தேவன் தமக்கு சித்தமானவனை அல்லது வழக்கம் போல ஒன்றுமில்லாத ஒருவனை தம்முடைய வேலையைச் செய்யத் தெரிந்தெடுத்து தன்னை தேவன் என்று வெளிப்படுத்துகின்றார். ஓரு மனிதன் தன்னை ஒரு பொருட்டென்று நினைத்து பெரியவனாகக் கருதினால், அப்படிப்பட்டவனை தேவன் உபயோகிக்க முடியாது, ஏன் என்றால் அவனிடம் 'தான்,' என்ற சுபாவம் அதிகமாய் காணப்படுகின்றதே-! 19. இந்த காரியம் தான் இன்றுள்ள கிறிஸ்தவ சபைகளில் காணப்படுகின்றது. தங்களுக்கு எல்லாம் - தெரியும் என்று அவர்கள் நினைத்துக் கொள்கிறார்கள்... அதை அறியும்படி மனுஷன் பிரயாசப்பட்டாலும் அறியமாட்டான்'' (பிர:8:17) என்று தன்னை மிகைப்படுத்தும் மனிதனைக்குறித்து வேதம் கூறுகின்றது. இன்று நம் இடையேயுள்ள சங்கடம் என்னவென்றால், அதிகமான 'நான்,' என்ற சுபாவமும், அதிகமான மாய்மாலமும், கல்வியும், மத வைராக்கியம் போன்ற காரியங்கள் தான் உள்ளதேயொழிய தேவனுடைய வார்த்தையின் இரட்சண்யத்தை அறியும் அறிவு சிறிதளவே உள்ளது. இது மிகவும் பரிதாபத்திற்குரியதொரு பங்காகும். ஆம்-! தேவன் கல்லுகளினால் ஆபிரகாமுக்கு பிள்ளைகளையுண்டு பண்ணவும், தம் வார்த்தைக்கென்று உண்மையான தீர்க்கதரிசிகளை எழுப்பவும் வல்லவராய் இருக்கின்றார் என்பதை இஸ்ரவேல் ஜனங்கள் மறந்து விட்டிருந்தார்கள். ஒரு தீர்க்கதரிசி ஒரு குறிப்பிட்ட வேதாகமப் பள்ளியில் படித்து விட்டு வரவேண்டிய அவசியமில்லை. தேவன் அவர்களுடைய படிப்பை கவனித்துக் கொள்கின்றார். அவர்கள் 4 வருடங்கள் ஒரு வேதாகமப் பள்ளியில் படிக்கவோ, அல்லது கலைக்குறியப் பட்டதையோ (B,A:) பரமார்த்த வித்தியா மேதாவி (D.D.) போன்ற பட்டத்தையோ பெற வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாவதில்லை. தேவன் தமது திருவுளத்திற்கு பிரியமான ஏதொன்றையும் எடுத்து அதற்குள் தமது வார்த்தையை போடுகின்றார். அதை அவர், வெளிப்படுத்தி நிரூபிக்கவும் செய்கின்றார். 20. எந்த வேத சாஸ்திரக் கல்லூரியினின்று இயேசு வந்தார் என்று அவர்களால் கூறமுடியாது. அவ்வித அமைப்புகள் ஒன்றும் அவரோடு இருந்ததில்லை. ஆனால் அவரிடத்தில் இருந்த என்ன-? அவர் தேவனை உடையவராகவும், அந்த தேவ வார்த்தை ஆகவும் இருந்தார். தேவன் ஒரு தீர்க்கதரிசியை வேதாகமப் பள்ளியினின்று எழுப்புவதில்லை. எப்பொழுதாவது தேவன் அவ்விதம் செய்தார் என்பதற்கு சரித்திர ஆதாரம் உண்டா என்று ஆராய்ந்து பாருங்கள். இயற்கையாக தன்னிலே நம்பிக்கையிழந்த யாதானும் ஓருவனை தேவன், எடுத்து தம்முடைய வார்த்தையை அவனில் வைத்து பின்பு தம்மை வெளிப்படுத்து கின்றார். இந்தக் காரியத்தைத் தான் தேவன் ஆமோஸிடம் செய்து கொண்டு இருந்தார். ஆமோஸின் வார்த்தை, கர்த்தருடைய வார்த்தை தான் என்று தேவன் நிரூபித்தார், இன்று ஆமோஸ் நம் மத்தியில் வருகை தருவாராயின், நம்முடைய நாடும், நம்முடைய ஜனமும் அவனை ஏற்றுக்கொள்வார்கள் என்று நினைக்கின்றீர்களா-? இங்குள்ள பாப்டிஸ்கடுளும், மெத்தோடிஸ்டுகளும், பிரஸ்பிட்டேரியன்களும், பெத்தேகோஸ்தேயினரும், கத்தோலிக்கரும் தீர்க்கதரிசியை ஏற்று கொள்வார்கள் என்று நினைக்கின்றீர்களா-? நிச்சயமாக ஒரு போதும் அவர்கள், அவனை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.. ஆமோஸ் நம் மத்தியில் செய்யும் முதலாவது காரியம் என்னவென்றால், ஒவ்வொரு ஸ்தாபனத்திற்கும் எதிராக ஒவ்வாமலிருப்பது தான், ஏனென்றால் அவைகள் தேவனுடைய வார்த்தைக்கு முரணாயிருக்கின்றன. ஆம், ஐயா-! எல்லாக் கோட்பாடுகளையும், பிரமாணங்களையும், ஸ்தாபனங்களையும் தீர்க்கதரிசி கண்டனம் செய்வான், பெந்தேகோஸ்தே சபையின் போதகர் சிலர், ''அந்த மனிதன் எங்கள் பட்டணத்திற்கு வராததற்காக கர்த்தருக்கு மகிமையுண்டாவதாக,'' என்று சொல்லார்கள் என்று நான் யூகிக்கிறேன். 21. இந்த பாப்டிஸ்டுகளும், பிரஸ்பிட்டேரியன்களும் என்ன செய்வார்கள் என்று நினைக்கின்றீர்கள்-? ''அந்த அறிவிலியும், பயித்தியக்காரனும் எங்கள் சபையின் மத்தியில் வரவேண்டாம்,'' என்று கூறுவார்கள். அவன் வீதியினின்று அப்புறப் படுத்தப்பட்டு, அவனை சிறைசாலையில் போடக்கூடுமானால் அதற்கான தாக்கீது களில் அவர்கள் கையெழுத்துமிடுவாாகள். ஓ, தேவனுடைய வார்த்தையை நீ சிறையில் அடைக்க முடியாது. அது எப்படியாயினும் வெளி வரும். ஓர் இரவு அவர்கள் தேவனுடைய வார்த்தையை சிறையிலடைக்க முயற்சித்த பொழுது. சிறைக் கதவுகள் தானாக திறவுண்டன. (அப். 16:23-26) தீர்க்கதரிசி எதை செய்ய முற்படுவான்-? அவன் தேவனுடைய ஊழியக்காரனாய் இருப்பதினால் ஆதி விசுவாச அஸ்திபாரத்தினின்று தன்னுடைய கூட்டத் தொடரை துவக்கி, எல்லாச் சமயக் கோட்பாடுகளையும் தகர்த்தெறிவான். அந்த அஸ்திபாரம் என்ன-? தேவனுடைய வார்த்தையே. ஆம், அதுதான் உண்மை. "வானமும், பூமியும் ஒழிந்துபோம். என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை,'' (மத். 24:35). ஆக, ஆமோஸ் தீர்க்கதரிசி ஒவ்வொரு ஸ்தாபனத்தையும், கோட்பாடுகளையும், சமயக் கட்டுப்பாடுகளையும் தகர்த்து தூர எறிந்து போடுவான், பெந்தேகோஸ்தேயி னரும், பாப்டிஸ்டுகளும், நசரேய-சபைகளும், பில்கிரிம்-ஹோலினஸ் சபைகளும், ஆகிய இவர்கள், அவனை ஏற்றுக் கொள்வார்கள் என்று நினைக்கின்றாயா-? அவர்கள் அவனை விரோதிப்பதே அல்லாமல், வேறொன்றும் செய்வதில்லை. "அவர்கள் தீர்க்கதரிசியை வரவேற்பதற்காக சென்று அவனை ஒரு அழகிய காரில் வைத்து நகரத்திற்குள் அழைத்து வருவார்கள் என்று நினைக்கின்றீர்களா-? இல்லை, அதற்கு மாறாக அவர்கள் வெயிலின் உஷ்ணம் அவனைத் தகிக்கட்டும்,'' என்று ஜெபம் பண்ணுவார்கள். நீ என்றும் பார்த்திராத அளவு அலங்காரமான எழுப்புதல் கூட்டங்கள் நகரெங்கும் அமைக்கப்பட்டு இருப்பதால், தீர்க்கதரிசி நகரத்திற்குள் பிரவேசியாமல் தடுப்பதற்கு ஏற்ற தடங்கல்களை அவர்கள் உண்டாக்குவார்கள். 22. அந்தப் பயித்தியக்காரனை நகரத்திற்கு புறம்பாக்கு,'' என்றும் கூறுவார்கள். இருந்தாலும், கர்த்தர் சொல்லுகிறதாவது,'' என்ற தேவவார்த்தையை தீர்க்கதரிசி உடையவனாய் இருப்பான், இதை உங்களால் உணர முடிகின்றதா-? அது தான் உண்மையான தீர்க்கதரிசியின் பாதை. அவன் நிச்சயமாக நிந்திக்கப்பட்டவனாய் இருப்பான். ஆனாலும் தன்னுடையக் கூட்டங்களில் அவன் வேத வாக்கியங்களை ஆதாரமாகக் கொள்ளுவான். மெத்தோடிஸ்டுகளும், பாப்டிஸ்டுகளும், பெந்தேகோஸ்தேயினரும் தனக்காக வந்து, தன்னுடைய கூட்டங்களுக்கு உதவி செய்யுங்கள் என்று அவன் ஒருபோதும் கூற மாட்டான். நீ எவ்விதம் ஞானஸ்நானம் கொடுக்கிறாய்-? பரிசுத்த ஆவி பெறுதலின் ஆரம்ப அடையாளம் என்ன-?'' என்பது போன்ற கேள்விகளை அவனுக்கெதிராக அவர்கள் வீசுவார்கள். ஆனால் தீர்க்கதரிசி அவைகளைக் குறித்த வேதாகம சத்தியங்களை அவர்களுக்கு எடுத்துக் கூறும் பொழுது அவனை புறம்பாக்குவார்கள், ஆனாலும் அது தான் ஒரு உண்மையான தீர்க்க தரிசியின் பாதையாய் இருக்கின்றது. இவைகளை சந்திக்க தேவ வார்த்தையை உடையவனாக அவன் இருக்கின்றான். நாம் தீர்க்கதரிசியை ஏற்றுக்கொள்ள மாட்டோம். அவனுடைய கூட்டங்கள் ஒன்றும் நம் நாட்டில் நடைபெற விடமாட்டோம். ஆனால் தீர்க்கதரிசி சபையை திரும்பவும் தேவனுடைய வார்த்தைக்கு கொண்டு வர முயற்சிப்பான். ஏனென்றால் அதுவே ஆதி அஸ்திபாரமாகும். வேறெந்த அஸ்திபாரமும் சொறி மணலாகும், தேவ வார்த்தையாகிய இந்த அஸ்திபாரத்தின் மேலே தான் தேவன் தம்முடைய சபையைக் கட்டுகிறார் (மத்.16;18) 23. சில நாட்களுக்கு முன்பாக ஒருவர் பாவ விமோசன ஸ்தானத்தைக் (Purgatory) "குறித்து இவ்விதமாக கூறினார். பரி. பிரான்சிஸ்சும், பரி. சிசிலியாவும் இந்த உத்தரிக்கும் ஸ்தலத்தினின்று மக்களை வெளியே கொண்டு வரும்படி ஜெபித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்றும் மேலும் அந்தப் பரிசுத்தவான்களே அதற்கு அதிகார பூர்வமான உதாரணம் என்றும் கூறினார். இந்த உதாரணங்கள் வேத வார்த்தையில் இல்லாத அதிகாரமாகும். அப்போஸ்தலர்கள் தேவ வார்த்தையின் அதிகாரம் உடைவர்களாய் இருந்தார்கள். அப்படி அது அவர்களுக்கு முரணாய் இருக்குமானால் அது ஒரு பொய்யே தவிர வேறொன்றுமில்லை. பாவ விமோசன ஸ்தானம் (Purgatory) என்பதை நான் விசுவாசிக்கிறேன். ஆனால் அது இப்பொழுது நாம் வசிக்கும் உலகத்திலே இருக்கிறது என்பதை விசுவாசிக்கிறேன். பாவ விமோசன ஸ்தானம் என்றால் ''சுத்தமாக்குதல்'' (to purge) என்று பொருள் சுத்தமாவது உன்னிடம் தான் உள்ளது நீ ஏதாவது பாவம் செய்வாயாகில் அதற்காக மனந்திரும்பி, அறிக்கையிட்டு அழுது, உபவாசத் தினாலும் ஜெபத்தினாலும் உன் இருதயத்தை சுத்தமாக்கு, மாறாக நீ சாகும் வரை காத்திருந்து, உனக்காக சில குருக்கள் உன்னை நியாயந்தீர்த்து உன்னை சுத்தமாக்குவார்கள் என்று எண்ணாதே. உன் ஆத்துமாவின் சுத்தமாக்குதல் உன்னிடம் தான் உள்ளது. இவ்விதமான காரியங்களை அவர்கள் அதிகாரப் பூர்வமான தேவனுடைய வார்த்தையை ஆதாரமாகக் கொண்டு பின்பற்றுகிறது இல்லை, மாறாக அவர்கள் மனிதனால் ஏற்படுத்தப்பட்ட கொள்கையை ஆதாரமாகக் கொண்டு உள்ளார்கள். இது செல்வத்தை சபைக்குள் கொண்டு வந்தது. அவர்கள் உலகத்தின் காரியங்களை நோக்கிப் பார்த்தார்கள்; சம்பத்தையும், அரசாங்க வல்லமையையும் விரும்பினார் கள், ஆனால் தேவனோ தம்முடைய வார்த்தையையே உற்று நோக்குகிறார். எந்த ஒரு வார்த்தையும் தேவ வார்த்தைக்கு முரணாகக் காணப்பட்டால் அது தவறான தாகும். ஆமோஸ் மனிதனால் ஏற்படுத்தப்பட்ட அவர்களின் கொள்கைகளின் அஸ்திபாரத் திற்கே சென்று அவைகளை சுக்கு நூறாக்கியிருப்பான். அதைத் தான் அவன் செய்கிறவனாய் இருந்தான். அவன் உண்மையான தேவனுடைய தீர்க்கதரிசியாய் இருந்ததினால் இதை செய்வதை தவிர வேறொன்றும் அவனால் செய்யக்கூடாது. தேவனுடைய, வார்த்தைக்கு திரும்பிச் செல்வதைத் தவிர வேறொன்றும் அவனால் கூடாது. தேசத்திலுள்ள எல்லா பெந்தேகோஸ்தேயினரும் அவனைச் சுற்றிக் கொண்டு, ''ஆமோஸே-! நீ ஒரு தீர்க்கதரிசி. என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். ஆனால், நீ சற்று தேவனுடைய. . வார்த்தையை விட்டு விலகி இருக்கிறாய், ஆகவே நாங்கள் உன்னை சீர்படுத்த விரும்புகிறோம்,'' என்று சொல்லக்கூடும், ஆனால் தீர்க்கதரிசி, தேவனுடைய வார்த்தையிலே நிலைத்திருப்பான். மக்களுக்குக் கொடுக்கத்தக்கதான ஒரு செய்தி அவனிடம் உண்டு; அது தேவனுடைய வார்த்தையே, அந்த செய்தி எவ்வளவு புகழற்றதாக இருந்தாலும், தேவ வார்த்தை தீர்க்கதரிசியினிடம் தான் எப்பொழுதும் வருகின்றதாய் இருக்கிறது. 24. எவன் ஒருவன் தன்னை தேவனுடைய தீர்க்கதரிசி என்று அழைத்துக் கொண்டு அந்த தேவனுடைய வார்த்தையையே மறுதலிக்க முடியும்-? எப்படி 'ஒரு மனிதன், பட்ட பெயர்களான பிதா, குமாரன் ; பரிசுத்த ஆவியின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுத்து, வேத ஆதாரமற்ற இந்த கொள்கையையுடையவனாய் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தை மறுதலிக்க முடியும்-? நான் ஒருவேளை கடினமா னவனாகவும், மார்க்க வெறிக் கொண்டவனாய் இருக்கலாம். ஆனால் அவ்வித வழியைத் தான் உபயோகிக்க வேண்டி இருக்கிறது. தங்களை. கிறிஸ்தவர்கள் என்று கூறிக் கொள்ளும் இன்றைய மக்கள் உல்லாசப் 'பிரியராயும், பெண்கள் தங்கள் மயிரைக் கத்தரித்துக் கொண்டும், குறைவான ஆடைகளை உடுத்துக் கொண்டும், புகை பிடித்துக் கொண்டும், எல்லாவிதப் படக் காட்சிகளையும் பார்த்துக் கொண்டும் இன்னும் பலவிதமான தேவவார்த்தைக்கு எதிரான காரியங்களையும் எவ்விதம் செய்யக் கூடும்-? இதை பரிசுத்த ஆவியென்று நீங்கள் என்னிடம் கூற முடியுமா-? அவ்விதம் ஒரு போதும் கூறாதீர்-! இவ்வித காரியங்களை செய்யும் போது, நீங்கள் தேவனை சங்கடப்படுத்துகிறீர்கள். ''அவர்களுடைய கனிகளினால் அவர்களை அறிவீர்கள்,'' (மத் 7:16) என்று இயேசு கூறினார். ஆமோஸ் அங்கிருந்த மயிர்கத்தரித்த பெண்களுக்கெதிராக கண்டனம் பண்ணி இருக்கக்கூடும். அவன் ஒரு தீர்க்கதரிசியாய் இருந்ததால்; அதுவே அவன் கூறும் வார்த்தையாய் இருந்தது. "ஓ, யேசபேல்களே'' என்றும் அவன் கூறியிருக்கக்கூடும். அவர்கள் தங்கள் நிலையை சரி செய்து இருப்பார்கள் என்று நீங்கள் நினைக்கின்றீர்களா-? இருக்க முடியாது. அவன் ஒரு மதவெறியன். பெண்களின் எதிரி,'' என்று அவர்கள் கூறி இருப்பார்கள். 25. தேவனுடைய வார்த்தையோடு ஒன்றிபோகாத வரை நீ எவ்வளவு தான் பரிசுத்தமாக ஜீவிக்க முயற்சித்தாலும் அது ஒன்றிற்கும் உதவாது, நீ ஒரு பாவியும், அவிசுவாசியாகவும் காணப்படுவாய், ஆமோஸ் மரத்தின் வேரிலே கோடரியை வைத்தவனாய் இருந்தான். அவன் எதையும் தப்பவிடவில்லை. ஆம், அது தான் ஓரு உண்மையான தீர்க்கதரிசியின் வழி. தேவனுடைய வார்த்தை யாரை பாதிப்பதாய் இருந்தாலும் அவர்கள் அந்த தேவனுடைய வார்த்தையில் மட்டுமே நிலைத்து இருக்க வேண்டியவர்களாய் இருக்க வேண்டும். அது தன் தகப்பனையோ, அல்லது தாயையோ பாதிப்பதாய் இருந்தாலும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை. ஏனென்றால் தேவனுடைய வார்த்தை தேவனுடைய வார்த்தையே, இதை இயேசு செய்தார். மரியாளை தன் தாயார் என்றும் அவர் அழைக்கவில்லை. ஆமோஸ், எல்லா ஸ்தாபனங்களையும் கண்டனம் செய்திருப்பான். ஏனென்றால் அவைகள் தேவனுடைய வார்த்தையின் மேல் கட்டப்பட்டிருக்கவில்லை. அவர்கள் தங்களை ஸ்தாபித்த உடனே தானே, தேவனுடைய வார்த்தைக்கு முரணான கொள்கைகளை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். தேவனுடைய வார்த்தை தவறு என்று கூறும் காரியத்தை தீர்க்கதரிசி எப்படி ஆசீர்வதிக்கக்கூடும்-? தன் சகோதரனை குற்றப்படுத்த அவன் விரும்பவில்லை; ஆனாலும் அவன் அவ்விதம் செய்ய வேண்டியவனாய் இருக்கின்றான். ஏனென்றால் அவன் தேவனுடைய தீர்க்க தரிசியாய் இருக்கின்றான். அவன் உண்மையான தேவனுடைய வார்த்தையின் பிரதிநிதியாய் இருப்பதனால் அதை விட்டு வேறு எந்த வழியாகவோ அசைய அவனால் முடிவதில்லை. ''கற்பனையின் மேல் கற்பனையம். பிரமாணத்தின் மேல் பிரமாணமும்'' (ஏசா.28:10-13). இதுவே ஒரு உண்மையான தீர்க்கதரிசியின் வழி. தீர்க்கதரிசி சபையில் நடக்கும் ஒழுங்கீனங்களையும், அவர்களுடைய அறுப்பின் ஸ்தோத்திரப் பண்டிகைகளையும், கச்சேரிகளையும், ஐக்கிய விருந்துகளையும் வேதத்திற்கு முரணான இன்னும் அநேகக் காரியங்களையும் கடிந்துக் கொள்வான். அவர்களை சிதறடித்து, தாங்கள் எந்த நகரத்தினின்று வந்தார்களோ, அதற்கே அவர்களை திருப்பி அனுப்புவான். ஸ்தாபனங்கள் தீர்க்கதரிசியை ஏற்று கொள்வார்கள் என்று நினைக்கின்றீர்களா-? இல்லை, இன்றுள்ள சபை அவனை ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாது. ''ஓ-! மயிர்கத்தரித்த பெண்களின் கூட்டமே-! பால் உணர்ச்சியைப் பரப்பும் அலங்கோலமான ஆடைகளை அணியும் பெண்களின் கூட்டமே-! ''கர்த்தர் சொல்லுகிறதாவது,'' என்ற வார்த்தையின் பொருள் என்ன என்று தெரியுமா-? 'ஓ, பெண்ணே-! பால் உணர்ச்சியைத் தூண்டத்தக்கதாக இறுக்கமான ஆடையணிந்து நீ வெளியே செல்லும் போது உன்னைப் பார்க்கும் ஒவ்வொரு ஆணும் விபச்சாரம் செய்ய நீ ஒரு தூண்டு காரணியாய் இருக்கிறாய்,'' என்பதை அறிவாயா-? (மத்.5:28) என்றெல்லாம் கேட்கிறவனாக தீர்க்கதரிசி பெந்தேகோஸ்தேயினர் இடத்திலும் மற்ற சபைகள் இடத்திலும் வரும் போது, அவர்கள் அவனை ஏற்றுக் கொள்வார்களா-? 26. அந்த வழுக்கைத் தலையனான கிழப்பைத்தியக்காரனைப் பிரசங்கப் பீடத்தில் இருந்து அகற்றும்,'' என்றும், சபை சங்கத்தைக் கூட்டி ஆலோசித்து, உதவியாளர் களே, அந்த மனிதனை அகற்றுங்கள்,'' என்றும் கூறுவார்கள். ''நான் அந்நிய பாஷை பேசுகிறேன். கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக, அல்லேலூயா,'' என்று ஒரு வேளை நீ கூறலாம். ஸ்திரியானவள் தேவனை நோக்கி ஜெபம் பண்ணுகையில்: தன் தலையை மூடிக் கொள்ளாமல் இருக்கிறது இலட்சணமாயிருக்குமோ என்றும் உங்களுக்குள்ளே நிதானித்துக் கொள்ளுங்கள். புருஷன் மயிரை நீளமாய் வளர்க்கிறது அவனுக்குக் கனவீனமாயருக்கிறதென்றும், 27. ஸ்திரி தன் மயிரை நீளமாய் வளர்க்கிறது அவளுக்கு மகிமையாய் இருக்கிறதென்றும் சுபாவமே உங்களுக்கு போதிக்கிறதில்லையா-? தலைமயிர் அவளுக்கு முக்காடாகக் கொடுக்கப்பட்டிருக்கிறதே (1-கொ.11:13-15). ''இந்த வார்த்தைகளைப் புறக்கணித்து உன்னை கிறிஸ்தவனென்று அழைத்துக்கொள்ள விரும்புகிறாயா-? வெட்கமாக இருக்கின்றது. எங்காவது ஒரு மூலையில் உன்னை முடக்கி தேவனோடு உன்னை சரி செய்துக்கொள். பால் உணர்ச்சியை தூண்டக்கூடிய ஆடையை அணிந்து நீ வெளியே செல்லும் போது, எல்லா மனிதரோடும் நீ விபச்சாரம் செய்கின்றவளாயிருக்கின்றாய். ''ஒரு ஸ்திரியை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபச்சாரஞ் செய்தாயிற்று,'' (மத். 5:28) என்று இயேசு கூறினார். நீ அந்தவிதமாக மனிதனுக்கு முன்னே உன்னை காண்பித்து வசீகரப்படுத்துவதனால் அந்த விபச்சாரத்தைக் குறித்து குற்றமுள்ளவளாய் இருக்கின்றாய். புதிதான ஜீவனுள்ளவனாய் நடந்துக் கொள்ளும்படிக்கு உலகத்தின் காரியங்களுக்கு நீ நிச்சயமாக மரிக்க வேண்டியவனாய் இருக்கின்றாய். 28. புதிதான ஜீவனுள்ளவனாய் நடந்துக்கொள்ளும்படிக்கு உலகத்தின் காரியங்க ளுக்கு நீ நிச்சயமாக மரிக்க வேண்டியவனாய் இருக்கின்றாய் (ரோம.6:4). பெண்கள் அவ்விதமாக ஆடை அணிந்து வரும் போது அவர்களைப் பார்க்கிற நீ அவமானத்தால் குன்றி உன் தலையை திருப்பிக் கொள்வதற்கு மாறாக அவர்களை இச்சித்து விபசாரத்திற்குள் ஈடுபடும் உன்னை கிறிஸ்தவனென்று அழைத்துக் கொள்கிறாயா-? இதைத்தான் ஆமோஸ் உன்னிடம் சொல்லக்கூடும். தேவனுடைய உண்மையான தீர்க்கதரிசியாய் இருந்து அவன் இந்த வார்த்தையைச் சொல்லி இருக்கக்கூடும் ஆகையால், நான் அவனுடைய வார்த்தைகளை எடுக்க முயற்சிக் கிறேன். அவன் தேவனுடைய வார்த்தையில் நிலைத்திருக்க வேண்டியவனாய் இருக்கின்றான். ஏனெனில் அவன், அந்த வார்த்தையாகவே இருக்கின்றான். ஒரு வேளை அந்த மனிதனை, நீ இங்கு காணாமல் இருக்கலாம். ஆனால் அவனுடைய வார்த்தை கிடைக்கப் பெற்றவனாய் இருக்கின்றாய். . ஒரு தீர்க்கதரிசியாய் இருப்பது நல்லதென்று அநேக ஜனங்கள் கூறுவார்கள். அது சரியே, நீ உலகத்தின் காரியங்களை புறம்பே தள்ளி தேவனிலும், அவருடைய வார்த்தையிலும் நிலைக்க ஆயத்தமாகும் பொழுது மட்டுமே அப்படியாகும். நம்முடைய ஸ்தாபனங்கள் எந்த விதத்திலும் ஆமோஸை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அவனோடு செய்யக் கூடிய காரியம் அவர்களுக்கு ஒன்றுமில்லை, 29. அவர்கள் தங்கள் நம்பிக்கையின் தேவன் என்றழைத்த அவரே, அவர்களை அழிக்கப் போகிறார் என்பதைக் தீர்க்கதரிசி கடிந்துக் கொண்டான் என்பதை கவனி. இதை குறித்து நீ என்ன செய்வாய்-? நீதிக்கேடான காரியங்களை செய்தும் அதை செய்கிறவர்களை அனுமதித்தும் வருகின்ற பெந்தோகோஸ்தேயினர், தாங்கள் நம்பும் அதே தேவனே, அவர்களின் ஸ்தாபனங்களின் மேல் நியாயத் தீர்ப்பை கொண்டு வருகிறார் என்பதை அறியாமல் இருக்கிறார்கள். சரியாக இதைத்தான் ஆமோஸ் அவர்களிடம் கூறக்கூடும். ஓ-! ''எங்களுக்கு, பிதாவாகிய ஆபிரகாமும், நியாயப்பிரமாணமும், போதகர்களும், தீர்க்கதரிசிகளும் உண்டு,' என்று இரவேலர் அன்று கூறினார்கள். ஆமோஸின் கண்கள் அவர்களைப் பார்த்தபொழுது சங்கடப்பட்டன. தேவனுடைய வார்த்தையைக் கொண்டு அவன் அவர்களைக் கடிந்து கொண்டான். அவர்களின் மனித கோட்பாடுகள் நிமித்தம் அவர்கள் அழிக்கப்படப் போகிறார்கள் என்று அவன் அறைகூவினான். அதைத்தான் இன்றும் இவர் செய்யக் கூடும் எந்த தேவனுடைய நாமத்தினால் பலகோடி ரூபாய் மதிப்புள்ள ஆலயங்களும், கோபுரங்களும் கட்டி யேகோவாவுக்கென்று அதை பிரதிஷ்டை செய்து, தேவனை நேசிக்கிறேன் என்று கூறுகின்றாயோ, அவருடைய வார்த்தையைப் புறக்கணிப்பதினால் அந்த தேவனே உன்னை அழிக்கப் போகின்றார். 30. இயேசுவைத் தொழுது கொள்கிறோம் என்று சொல்லிக் கொள்ளுகிற இந்த உலகத்தின் மேல் தேவனுடைய நியாயத்தீர்ப்பு பிரயோகிக்கப்படப் போகின்றது. இந்த உண்மை அசைக்கப்படா வண்ணம் உன் உள்ளத்தில் பாயும் என்று நான் நம்புகிறேன். உன்னுடைய ஒழுக்கங்கெட்ட நடத்தையினாலும், மனித சம்பிரதாயக் கோட்பாடுகளினாலும் தேவனுடைய வார்த்தையை விட்டு புறம்பானதினால், நீ நேசிக்கிறேன் என்று கூறும் அதே, தேவனே உன்னை அழிக்கப் போகின்றார். தேவ வார்த்தையோடு சீர் பொருந்து. சுவிசேஷத்தை, தேசத்திலும் மற்ற இடங்களிலும் பிரசங்கம் செய். ஸ்தாபனங்களும், ஊழியக்காரர்களும், மாய்மாலம் செய்து கூச்சலிட்டு, உன்னை புறம்பாக்கினாலும் சத்தியத்தை பேசு. பெண்கள் எந்தக் காரணம் கொண்டும் தங்கள் முடியை நீளமாக வளர்க்க மாட்டார்கள். ஒவ்வொரு வருடமும் மாறும் நாகரீக நிலைக்கேற்ப தங்களை அலங்கரித்துக் கொள்வார்கள், இது ''வாத்தின் மேல் வார்த்த நீரை,'' போன்றுள்ளது. இருந்தாலும் தாங்கள் தேவனை நேசிக்கிறவர்கள் என்று அழைத்துக் கொள்ளுகிறார்கள். நீங்கள் போதித்த உங்கள் பாரம்பரியத்தினால் தேவ வசனத்தை அவமாக்குகிறீர்கள்'' (மாற்:7:13) என்று இயேசு கூறினார். தீர்க்கதரிசியின் வழி சுலபமானது அல்ல. மேலும் கீழும் குதித்து கூச்சலிட்டு, தோளின் மேல் அன்பாகத் தட்டிக் கொடுத்து, எல்லோராலும் நல்லவன்,'' என்று அழைக்கப்படுகின்ற ஒரு காரியமல்ல இது. அது அப்படியாய் இருக்குமாயின் நீ ஒரு உண்மையான தீர்க்கதரிசி அல்ல. எல்லா மனுஷரும் உங்களைக் குறித்துப் புகழ்ச்சியாய் பேசும் போது உங்களுக்கு ஐயோ: அவர்கள் பிதாக்கள் கள்ள தீர்க்கதரிசிகளுக்கும் அவ்விதமே செய்தார்கள்.'' (லூக்.6:26) என்று இயேசு கூறினார்.. 31. எப்பொழுதாவது அவர்கள் ஆமோஸை தட்டிக் கொடுத்து பாராட்டினார்களா-? எலியா தீர்க்கதரிசியை அவர்கள் பாராட்டி, அவன் முதுகில் தட்டிக் கொடுத்திருக்க முடியாது. அவன் அவ்வித காரியங்களுக்கு ஏற்ற மனிதன் அல்ல. இல்லை, ஐயா. அவர்களுக்கு அவன் தேவ சத்தியத்தை அறை கூவினான். நாம் பரலோகத்திற்கு போகிறவர்களாய் இருப்போமானால், இங்குள்ள சிறிய காரியங்களோடு நம்மால் ஐக்கியப்பட்டு போக முடியவில்லை என்றால், அங்குள்ள ஆவியின் தன்மையோடு எவ்வாறு ஐக்கியப்பட முடியும்-? நீ தேவனுடைய வார்த்தையோடு ஒத்திருப்பது அவசியமாய் இருக்கிறது. தீர்க்கதரிசி சொல்லி செய்யும் காரியம் அவனை எவ்வளவு தான் நொறுக்கி கிழித்துப் போட்டாலும் அதை அவன் நிறைவேற்றத்தான் வேண்டியதாய் இருக்கின்றது. கம்யூனிசம் இன்று வெகுவாகப் பரவி வரக் காரணம் சபைகளின் நிலையும், மக்களின் பாவங்களுமே. இன்று கிறிஸ்தவர்களென்று கூறிக்கொள்பவர்கள், தேவ தூதர்களைப் போல் அழகியக் குரலால் பாடுகின்றார்கள், பிரதான தூதனைப் போன்று மிக அழகாகப் பேசுகின்றனர். இருந்தாலும் தேவனுடைய வார்த்தையை பிசாசைப் போன்று அவிசுவாசிக்கின்றார்கள். கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலா அல்லது பட்டப் பெயர்களாகிய பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் 'நாமத்தினாலா, எந்த விதத்தில் ஞானஸ்நானம் கொடுப்பதை வேதம் போதிக்கிறது என்று ஒரு ஊழியக்காரனிடம் நீ கேட்டால், அவன், பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினால் தான் கொடுக்க வேண்டும் என்று கூறி, உன் முகத்திற்கு நேராக சிரித்து, தான் ஒரு தேவ வார்த்தையின் விசுவாசி என்று தன்னை அழைத்துக் கொள்வான், மயிரைக் கத்தரித்துக் கொள்வதும், நீதிக்கு புறம்பான ஆடைகளை உடுத்தி உலகப் பிரகாரமாக நடந்துக் கொள்வதையும் வேதம் கடிந்துக்கொள்கிறது என்பதை பெண்கள் அறிந்திருந்தாலும் அதை இன்னுமாய் செய்து கொண்டு தானிருப்பார்கள், இருந்தாலும் அன்னிய பாஷை பேசி, மேலும் கீழுமாகக் குதித்து, சத்தமிட்டு, தங்கள் மாதர் சங்கங்களை அமைத்துக் கொண்டும், பெண் ஊழியக்காரரை அனுப்பி கொண்டும் தான் இருக்கின்றார்கள். இது தேவனுடைய சமூகத்திற்கு முன் துர்நாற்றம் வீசுகிறதாய் மாறிவிட்டது. இந்த முழுக் காரியங்களையும் தேவன் அழிக்கப் போகின்றார் என்று கர்த்தர் சொல்லுகிறார். கர்த்தர் சொல்லுகிறார்,'' என்று சொல்வது ஒரு சுலபமான காரியமல்ல, ஆனாலும் அது ஒரு தீர்க்கதரிசியின் வழியாயிருக்கிறது. யோவான் ஸ்நானன் ஒரு உண்மையான தீர்க்கதரிசியாய் இருந்து, ''இப்பொழுதே கோடாரி யானது மரங்களின் வேர் அருகே வைத்திருக்கிறது. ஆகையால் நல்ல கனி கொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும். (மத்.3:10) என்று கூறினான். 32. இன்று உள்ள சபைகள் சங்கடமான நிலைமையில் காணப்படுகின்றன. அங்கத்தினர்கள் தேவ தூதர்களைப் போல் பாடி பிசாசுகளைப் போல் நடனம் ஆடுகின்றனர். பெந்தேகோஸ்தேயினர் என்று கூறிக் கொள்பவர்களும் கூட உலகப் பிரகாரமான எல்லாவித பொழுது போக்குகளிலும் கலந்துக் கொள்கின்றனர், படக்காட்சிக் கொட்டகைகள் அவர்களால் நிறைந்து உள்ளன. இவ்விதமாக இருந்தாலும் அவர்கள் தங்களை கிறிஸ்தவர்களென்று அழைத்துக் கொண்டு, அந்நிய பாஷை பேசி, கால் கழுவதிலும், அப்பம் பிட்குதலிலும் கலந்துக் கொள்கின்றனர். ''நாயானது தான் கக்கினதைக் தின்னும்படி திரும்புவதுபோல, மூடனும் தன் மூடத்தனத்திற்குத் திரும்புவான்,'' (நீதி. 26:11) என்று வேதம் கூறுகின்றது. அவைகளெல்லாம் உலகமாயிருந்து உன்னை விட்டு கழுவப்பட வேண்டியதாய் இருக்க பின் ஏன் அதற்குள் நீ திரும்பவும் செல்கின்றாய்-? குறைவான ஆடைகளை உடுத்திக் கொண்டும், மயிரைக் கத்தரித்துக் கொண்டும் தெருக்களில் ஆபாசமாய் வரும் மக்கள் தங்களை கிறிஸ்தவர்கள் என்று கூறிக் கொள்கிறார்கள். எவ்வளவு நிர்ப்பந்தம்-? நீதிக்கு புறம்பான ஆடைகளை உடுத்திக் கொள்ளுதல் பெண்களுக்கு தகாது என்று பரிசுத்த ஆவியானவர் கடிந்துக்கொள்ளும் நிலையில், ஒரு பெண் அவைகளையே செய்து, பரிசுத்த ஆவியினால் நடத்தப்படுகின்றாள் என்று கூறினால் அதை உன்னால் கற்பனை செய்து பார்க்க முடியுமா-? அப்படியானால் பரிசுத்த ஆவியானவர் எப்படிப்பட்டவராய் இருக்கக் கூடும்-? பட்டப் பெயர்களாகிய பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினால் யாராவது ஞான ஸ்நானம் கொடுக்கப் பட்டதை வேதத்திலிருந்து ஆதாரம் காட்டக் கூடுமோ-? என்று ஒரு பிரசங்கியைக் கேட்டால், அவர் உன் முகத்திற்கு நேராக சிரித்து, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் நீ ஞானஸ்நானம் கொடுப்பதை கேலி செய்து உன்னை மதவெறியன் என்று கூறினால், இது பரிசுத்த ஆவியின் நடத்துதல் என்று நீ கற்பனை செய்கின்றாயா-? பரிசுத்த ஆவியானவர் தம் சொந்த வார்த்தையை மறுதலிக்க முடியுமா-? இவ்விதக் காரியங்களை செய்யாமல் இருந்து, நீ பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள். பரிசுத்த ஆவியினால் நடத்தப்படும் ஒரு மனுஷனாவது, மனுஷியாவது எப்படி இக்காரியங்களை செய்ய முடியும்-? ஒருக்காலும் முடியாது-! அவர் பரிசுத்தர், அவருடைய ஜீவன் உனக்குள் இருந்தால் நீயும் அவரைப் போலவே இருக்கின்றாய். 33. ''இதை கூறுவதற்கு உனக்கு அதிகாரம் இல்லை,'' என்று ஒரு வேளை நீ கூறலாம். எனக்கு உரிமையுண்டு என்று நான் கூறுகிறேன். ஏனென்றால் அது தேவனுடைய வார்த்தையாய் இருக்கின்றது. நாம் அதை பிரசங்கித்துத் தான் ஆக வேண்டும். அநேக கோழையான பிரசங்கிகள் சத்தியததை விட்டு விடுகின்றார்கள். ஏனெனில் அவர்களுக்கு அதை பிரசங்கிக்க மன தைரியம் இல்லை. ஒரு வேளை முதலாவது அவர்கள் பிரசங்கிக்கவே அழைக்கப்படாதவர்களாக இருக்கலாம். ஆனால் ஒரு உண்மையான ஊழியக்காரன் தேவ-வார்த்தையில் மட்டும் நிலைத்திருப்பான். நான் ஃபீனிக்ஸ் (Phocnix) என்னுமிடத்தில் பிரசங்கிக்க அழைக்கப்பட்டிருந்தேன். அங்கு ஒரு ஊழியக்காரரின் மனைவி மேலும் கீழுமாக குதித்து பாடல்களை நடத்திக் கொண்டு இருந்தாள். அவளோ தன் உள்ளாடை தெரியும் அளவிற்கு குறைவான ஆடை உடுத்தி இருந்தாள். மேலும், தன் மயிரை கத்தரித்தும், காதுகளில் லோலாக்குகளை மாட்டியும் இன்னும் பலவிதமான அலங்காரங்களை செய்தவளாகவும் அவள் காணப்பட்டாள். இவ்விதக் காரியங்களை கொண்டு இருந்தாலும் தாங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றவர்கள் என்று அவர்கள் கூறிக் கொள்கிறார்கள். ஆனால் தேவனோ அவைகளை கடிந்துக் கொள்கிறார். அந்தக் காரியத்தை நான் அன்று மிகவும் எதிர்த்து பிரசங்கம் செய்தேன். அதன் பின்பு அங்கு நான் திரும்பவும் அழைக்கப்படவில்லை. அதை நான் எதிர்பார்க்கவும் இல்லை. ஆனால் எது நல்லது எது தவறு என்று அவர்களுக்கு தெரியும். நியாயத்தீர்ப்பு நாளில் நான் நிற்கும் போது அவர்களின் இரத்தப்பழி என் கைகளில் இல்லை. அங்கு நிற்கும் போது நான் தேவ வார்த்தையோடு நின்று உன்னை சந்திப்பேன். 34. ஒரு சமயம் ஒரு பட்டணத்தில் நான் என் சில நண்பர்களோடு இருந்த போது, ஒரு மனிதன் என்னைப் பற்றி தன்னுடைய கருத்தை இவ்விதமாக தெரிவித்தார்: ''முன்னொரு சமயம் சகோ.பிரான்காம் நம் மத்தியில் வந்திருந்தார், அவர் ஒரு நல்ல மனிதன் தான். ஆனால் அவருடைய பிரசங்கங்கள் அடங்கிய ஒலி நாடாக்களை மாத்திரம் கேட்காதீர்கள். ஏனென்றால் அது. உங்களை குழப்பத்தில் ஆழ்த்திவிடும்,'' என்றார். அங்கு நின்றிருந்த என் நண்பர்களில் ஒருவர் உடனே, "ஐயா, சற்று பொறுங்கள், நான் பிரன்காமின் பிரசங்கத்தைக் கேட்காமல் இருந்தவரை மிகவும் குழப்பத்தில் இருந்தேன். பரிசுத்தமான தேவன் நீங்கள் செய்யும் இவ்விதமான எல்லாக் காரியங்களிலும் எப்படி பிரசன்னமாயிருக்கக் கூடும் என்று என்னால் புரிந்துக் கொள்ள முடியவில்லை.'' என்று கூறினார். . . இதே மனிதன் மற்றொரு இடத்தில், 'சகோ.பிரான்காம் ஒரு தீர்க்கதரிசி தான். அவரால் காரியங்களை பகுத்தறிய முடியும். ஆனால் அவருடைய உபதேசங்களை மட்டும் கவனிக்காதீர்கள். ஏனென்றால் அவைகள் சரியானவைகள் அல்ல,'' என்று கூறினார். இது அந்த மனிதனுடைய பைத்தியக்கார தன்மையைத் தான் குறிக்கின்றது. தேவனுடைய வார்த்தை எப்பொழுதும் தீர்க்கதரிசி இடத்தில் வருகிறது. பின்பு தீர்க்கதரிசி அதை ஜனங்களிடத்தில் கொண்டு வருகிறான் (ஆமோ. 3:7). தேவனுடைய வார்த்தையை நீ மறுதலித்து ஒரு ஸ்தாபனத்தின் மறைவில் உன்னை மறைத்துக் கொள்வது புத்திசாலித்தனம் அல்ல. ஒரு நாளில் இந்த ஸ்தாபனங்கள் எல்லாம் வெடித்து, உடைந்து நரகத்தில் அழியப் போகின்றன. ஆனால் தேவனுடைய வார்த்தையோ என்றென்றும் நிலைத்திருக்கும். அந்த கன்மலையின் மேல் - அந்தக் கர்த்தரின் வார்த்தையின் மேல் - என் நம்பிக்கை எப்பொழுதும் கட்டப்பட்டிருக்கின்றது. எல்லாம் அழிந்து போகட்டும், என் சிநேகம் கிறிஸ்துவில் உள்ளதால் என் நண்பர்களை எல்லாம் இழந்து போனாலும் கவலை இல்லை. "இயேசுவின் இரத்தத்திலும் அவருடைய நீதியிலும் தான் என் நம்பிக்கை கட்டப்பட்டிருக்கின்றது, என் ஆத்துமா விடுபடும் பொழுது அவரே என் நம்பிக்கையும் என் இளைப்பாறுதலின் இடமுமாம்''. சில வருடங்களுக்கு முன்பாக, ஒரு துப்பாக்கி என்னுடைய கரங்களில் வெடித்து சிதறியது. மரணம் எனக்கு சம்பவித்து விட்டது என்று நான் நினைத்தேன். அமைதியான நினைவோடு என்னை சுற்றிலும் நான் பார்த்து, நல்லது. இது தான் காரியம். இந்நிலையில் ஒரு ஸ்தாபனம் எனக்காக என்ன செய்து விடக்கூடும்-? தேவனுடைய வார்த்தையினால் நான் நியாயந்தீர்க்கப்பட ஒரு நாள் நிற்க வேண்டியவனாய் இருக்கின்றேனே' என்று நினைத்தேன். நான் ஒரு வேளை வதைக்க வேண்டியவனாகி, வளைத்து, முறுக்கி அநேக மக்களை இழுத்து அப்புறப்படுத்தினாலும், தேவனுடைய வார்த்தையினின்று ஒரு உண்மையான வித்தைப் பெற்று, அங்கு தானே நித்தியத்திற்கென்று ஒரு ஆத்துமாவை கட்டி எழுப்ப நம்பிக்கைக் கொண்டிருக்கிறேன். பின்பு தேவன் தம்முடைய கரங்களை அதன் மேல் வைத்து ஒரு கீழ்ப்படிதலுள்ள பிள்ளையாக உருவாக்கட்டும். 35. மற்றவர்களோடு வைத்துள்ள சம்பந்தத்தினால் தாங்கள் செழிப்புற்றிருப்பதை தேவனும் ஆமோதிப்பார் என்று இஸ்ரவேலர் நினைத்தார்கள். நாமும்கூட இன்று அவ்விதமாய் தான் நினைக்கின்றோம். சில நாட்களுக்கு முன் கிறிஸ்தவ மதத்தின் சில பெரிய மனிதர்களை நான் சந்திக்க நேர்ந்தது. அவர்கள் என்னிடம், ''தேவன் எங்களோடு இருக்கிறார் என்பதற்கு சரியான அத்தாட்சி, நாங்கள் சென்ற வருடத்தைவிட இன்று அதிகமாய் செழித்திருக்கிறோம்,'' என்று கூறினார்கள். அதற்கு நான், 'ஒரு துளியேனும் அது சரியென்று நிரூபிக்க முடியாது, சென்ற வருடத்தைவிட இந்த வருடம் விபச்சாரம் 30 சதவீதம் அதிகமாய் இருக்கின்றது. அதனால் தேவன் விபச்சாரத்தை அங்கீகரிக்கிறார் என்று பொருள்படுமா-?'' என்று கூறினேன். அப்படிக்கொத்த வாக்குவாதம் சரியானதல்ல. இல்லை ஐயா-! தேவன் தம்முடைய வார்த்தையில் இருக்கிறார். உண்மையாய் அந்த தேவ வார்த்தையில் ஒரு மனிதன் நிற்பானானால், தேவனும் கூட அவனோடு நிற்பார். இஸ்ரவேல் தேவனுடைய வார்த்தையைப் புறக்கணித்தது போன்று, நம்முடைய நாடும் இன்று தேவனுடைய வார்த்தையை புறக்கணித்து விட்டது. அவர்களுடைய ஜனங்களும், போதகர்களும், தீர்க்கதரிசிகளும் தேசத்தைக் குறித்து நல்லதாகவே தீர்க்கதரிசனம் உரைத்தார்கள். ஆனால் ஒரு உண்மையான தீர்க்கதரிசி தேவனுடைய வார்த்தைக்கு முரணாக எப்படி தீர்க்கதரிசனம் உரைக்க முடியும்-? நம்முடைய நேசமான வல்லமையான உலகம் அழிந்துக் கொண்டிருக்கின்றது, நாம் நம்முடைய முன்னோர்களின் அனுபவத்திற்கு திரும்ப வேண்டியவர்களாய் இருக்கிறோம். 36. உண்மையாகவே இஸ்ரவேல் ஒரு வல்லமையுள்ள தேசமாய் இருந்தது. அவர்களுடைய முன்னோர்களை கவனித்துப் பாருங்கள். ஆனாலும் தேவன் அவர்களை விட்டு வைக்கவில்லை. வயது சென்ற வழுக்கைத் தலையனான அந்த தீர்க்கதரிசி தேவனுடைய வார்த்தையை அவர்களிடம் கூறினான், அது அப்படியே தன் நிறைவேறுதலைக் கண்டது. உன்னுடைய வேதத்தை படித்து அது உண்மையா, இல்லையா என்று அறிந்து கொள். அவன் அவர்களை கடிந்துக் கொண்டான். இருந்தாலும் அவர்கள் அசைந்து கொடுக்கவில்லை. ஏனென்றால் அவர்கள் அவ்வளவாய் தங்கள் பாரம்பரியத்தினால் கட்டப்பட்டு இருந்தார்கள். இயேசுவும் தம்முடைய நாளிலிருந்த மதத் தலைவர்களை நோக்கி, 'நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள், 'உங்கள் பிதாவின் உடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்,'' என்று கூறினார். பின்பு அவர்கள் இயேசுவைப் பிடித்து மரத்திலே தூக்கி கொலை செய்தார்கள். ஆனால் தேவன் அவரை மறுபடியும் எழுப்பினார். 37. அன்று அவர்கள் எவ்விதம் ஆமோஸை அங்கீகரித்திருக்க முடியாதோ அதே விதமாகத் தான் இன்று நாமும் அநேகரோடு சம்பந்தம் கொண்டு உள்ளோம், ஸ்தாபனங்கள் வளர்ந்து பெருகி வருவதாலும், நாம் நினைக்கின்றபடி எல்லாம் நடக்கிறது என்பதாலும் தேவன் நம்முடைய நடத்தைக்கு எல்லாம் சம்மதித்து இருக்கிறார் என்று நினைக்கின்றோம். கோடிக்கணக்கான ப்ராடெஸ்டென்டுகளும் கத்தோலிக்கர்களும் ஒருவரோடு ஒருவர் இணைந்து சம்பந்தம் கொண்டுள்ளனர். கத்தோலிக்கர்களாகவோ, ப்ராடெஸ்டெண்டுகளாகவோ இருப்பதால், அவர்கள் தேவனால் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று நினைக்கின்றார்கள். அது புத்தியீனமானக் காரியம். அது பீரங்கி-க்கு உணவும், அணுகுண்டின் சாம்பலுமாய் இருக்கின்றது. அது வெடித்து சிதறுவதற்கென்று தேவனால் கட்டப்படும் உக்கிரமாய் இருக்கின்றது. எனக்கு செவி கொடு, நான் உனக்கு தேவனுடைய வார்த்தையைக் கூறுவேன். நம்முடைய உலகத்தைப் பார். நம்முடைய தேசத்தைப்பார். தேவ பக்தியில்லாத கூட்டமாகிய ஐக்கிய நாடுகளின் சபையுடன் (United Nations) நாம் கூட்டு சேர்ந்து இருக்கிறோம். அவர்களோடு கூட நடை போட துணிகரம் கொண்ட நாம், கூட்டத் தொடர் ஆரம்பிக்கு முன் ஒரு சிறு ஜெபம்கூட செய்வதில்லை. இரண்டு பேர் ஒரு மனப்பட்டு இருந்தாலொழிய ஒருமித்து நடந்து போவார்களோ'' (ஆமோ:3:3) என்னும் தேவ வார்த்தையை நீ படித்ததில்லையா-? நம்மோடு முகமதியரும், புத்த மதத்தினரும், நாஸ்திகர்களும், சுயநலமுள்ள பக்தியற்ற எல்லோரும் சம்பந்தம் கொண்டு இருக்கின்றார்கள். இந்த விதமான ஓரு அமைப்பின் மத்தியில் தேவன் வாசமாய் இருந்து அதை ஆசீர்வதிப்பார் என்று நீ நினைக்கிறாயா-? 38. ஆனாலும் நீ சொல்லுகிறாய், 'நம் சம்மந்தம் அவர்களோடு இருக்கிறது, நமக்கு மேற்கத்திய பாதுகாப்பு உண்டு, என்று. இஸ்ரவேலருக்கும் அவ்விதமே சுற்றிலும் உள்ள தேசத்தின் பாதுகாப்பு இருந்தது. ஆனாலும் கர்த்தர் அவர்களை அழிப்பார் என்று தீர்க்கதரிசி கூறினான். தாங்கள் எந்த தேவனை தொழுது கொள்கிறோம் என்று கூறினார்களோ, அந்த தேவனே அவர்களை அழிக்க சித்தம் கொண்டார் (ஆமோ: 5:16-27). அதையேதான் இன்று தேவன் நம்மையும் பார்த்துக் கூறுவார். வெள்ளை மாளிகைத் தொடங்கி, ஏழையின் சிறியப்பண்ணை வரையும் தேவன் தம்முடைய வார்த்தையால் கடிந்துக் கொள்வார்: அது தான் தீர்க்கதரிசியின் வழியுமாய் இருக்கின்றது. இன்றுள்ள நமது சபைகளை கவனித்துப்பாருங்கள். பெரிய கத்தோலிக்க சபையும் நமக்குண்டு. வேதம், ரோமன் கத்தோலிக்க சபையை மகா வேசி என்று கூறுகிறது (வெளி:17:1-10). ப்ராடெஸ்டெண்டு சபைகளும், கத்தோலிக்க சபையும் இணைந்து உலக ஐக்கிய சபைகள் சங்கத்தை அமைத்திருக்கின்றன. இந்தச் கத்தோலிக்க சபை மகா வேசியும், அருவருப்புகளின் தாய் என்றும் வேதம் கூறுகின்றது (வெளி:17:5). இருந்தாலும் சபைகளின் ஜக்கியத்தைக் குறித்து நாம் பிரமாதமாக நினைக்கிறோம். 39. சமீபத்தில் என் நண்பர் ஒருவரின் சகோதரனை நான் காண நேர்ந்தது. நான் அவரை நோக்கி, ''நீங்கள் அங்கேயுள்ள ஒரு அருமையான மெத்தோடிஸ்டு சபைக்கு தேவனை தொழுதுகொள்ள செல்கிறீர்கள் என்று நினைக்கிறேன்,'' என்று கூறினேன். அதற்கு அவர், 'உலக ஐக்கிய சபைகளின் சங்கத்தில் அவர்கள் சேர்ந்து விட்டார்கள் என்று நான் கேள்விப்பட்ட உடனே நான் அவர்களை விட்டு வெளி வந்து விட்டேன்'' என்றார் . அப்பொழுது நான் தேவன் உங்களை ஆசீர்வதிப்பார், சகோதரனே, நீங்கள் தேவனுடைய ராஜ்யத்திற்கு சமீபமாய் வந்துள்ளீர்கள்,'' என்று கூறினேன். 40. எல்லா சங்கங்களும் தங்களுக்கென்று ஒரு கோட்பாடை உடையதாய் இருக்கின்றன. அவை மனிதனால் ஏற்படுத்தப்பட்ட உபதேசங்களாலான மனித ஐக்கியத்தை சார்ந்திருந்து தேவனுடைய வார்த்தையை விட்டு விலகுகின்றன. இன்று நமது தேவை எல்லாம் தேவனுடைய வார்த்தையை அறைகூவும். ஒரு தீர்க்கதரிசி தான். அவர்கள் தங்களுக்குள் பாதுகாப்பை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். 'ஓ-! நாம் பெந்தேகோஸ்தேயினர்-! நிச்சயமாக நாம் போய் உலக ஐக்கிய சபைகளின் சங்கத்தில் சேருவோம். ஏனென்றால் அங்கு நமக்கு ஐக்கியம் உண்டு. அதுமட்டும் அல்ல. நாம் அங்கு ஆத்தும ஆதாயம் செய்யலாமே,'' என்று கூறுகிறார்கள். இது எப்படி இருக்கிறதென்றால், ஒரு பெண் தன் குடிகாரக் கணவனை திருத்துவதற்காக மதுபானக் கடைக்குள் சென்று தானும் குடித்து வெறித்து மயங்கினது போல காணப்படுகின்றது, புத்தியீனம், சாத்தானின் இடத்திற்கு விலகியிரு, ஏதாகிலும் ஒன்று தேவ வார்த்தைக்கு முரணாகக் காணப்பட்டால், அதற்கு நான் எதிரியாய் இருக்கிறேன். ஸ்தாபனங்களை நான் ஏன் எதிர்க்கிறேன் என்றால் அவைகள் தேவ வார்த்தையை எதிர்க்கின்றன. ஒவ்வொரு விசுவாசியும் இதை உணர்ந்து கொள்ள வேண்டும். அரிஸோனா என்றும் இடத்திலிருந்து ஒருவர் ஒரு செய்தித்தாளின் ஓரு பாகத்தை எனக்கு அனுப்பியிருந்தார். அதில் ஒரு முக்கியம் வாய்ந்த மனிதர் தற்பொழுது உள்ள போப்பாண்டவரை புகழ்ந்து பேசி, கத்தோலிக்கரும், ப்ராடெஸ்டெண்டுகளும் இணைவதைக் குறித்து பேசின ஒரே கத்தோலிக்க தலைவர் இவர் தான் என்றும், மேலும், அது நம்முடைய நாட்களில் நிகழா விட்டாலும் வரவேற்கப்படத்தக்க ஒன்று என்றும். குறிப்பிட்டிருக்கின்றார். இவர் இதைக் குறித்து தீர்க்கதரிசனம் உரைத்தாலும் இது என்னவென்று அறியாது இருக்கிறாரே என்று நான் நினைத்தேன். 41. இதையனுப்பின எனது நண்பர், அதன் முன் பாகத்தில் "சகோ.பிரான்காமே, நாம் நினைப்பதைக்காட்டிலும் காலம் அதிகம் கடந்து விட்டது. இந்தக் காரியங்களைக் குறித்து நீங்கள் சில ஆண்டுகளுக்கு முன்பே கூறவில்லையா, என்று எழுதி இருந்தார். அது அப்படித் தான் நிறைவேறும். ஏனென்றால் அது தேவனுடைய வார்த்தையாய் இருக்கின்றது. போப்பாண்டவரைக் குறித்து சொன்ன அந்த அதிகம் படித்த மனிதருக்கு அதைக் காட்டிலும் நலமானது ஏதாகிலும் தெரியும் என்று நீங்கள் நினைக்கின்றீர்களா-? உலகத்தின் தன்மையை அவர் இயல்பாக கவனித்து, தேவனுடைய வார்த்தையையோ மறுதலிக்கின்றார். எத்தனை மதத் தலைவர்கள், தீர்க்கதரிசிகள், உங்கள் மத்தியில் இருந்தாலும் அதைக் குறித்து எனக்கு கவலையில்லை. நீ தேவனுடைய வார்த்தைக்கு அப்பால் இருந்தால், நீயும் தேவனுடையவன் இல்லை. தேவனுடைய வார்த்தையை மறுதலித்துக் கொண்டிருக்கும் வரை, அவர்களுடைய காரியங்களை தேவன் எவ்வாறு ஆசீர்வதிக்க முடியும்-? தம்முடைய வார்த்தைக்கு முரணாக உள்ள எதையும் அவரால் எவ்விதம் ஆசீர்வதிக்க முடியும்-? உன்னை தின்றுக் கொண்டிருக்கும் புற்றுநோயை நீ எப்படி ஆசீர்வதிக்க முடியும்-? மின்சாரம் பாய்ந்துக் கொண்டிருக்கும் கம்பியைப் பிடித்துக் கொண்டு, 'நீ என்னை எரித்துவிடு'' என்று உன்னால் எப்படி சொல்ல முடியும்-? அது பயித்தியக்காரத்தனம். தேவன் தமது வார்த்தைக்கு முரணாயுள்ள காரியத்தை ஆசீர்வதிக்க முடியாது. ஆகவே அவருடைய வார்த்தைக்கு திரும்பு. 42. ஓ-! போதகர்களே, உங்களுக்கு நேர்ந்தது என்ன-? வயிற்றின் ஆகாரத்திற்காக உன்னுடைய புத்திர சுவீகாரத்தை விற்று விலையுயர்ந்த ஊர்தியில் வலம் வந்து பெரிய மாளிகையில் வாழ்ந்து, கோடி ரூபாய் மதிப்புள்ள ஆலயத்திற்கு மேய்ப்பனாய் இருக்கலாம் என்று நினைத்து ஓடுகிறாய். உன்னுடைய சபையில் உள்ள மக்களுக்கு தேவ வார்த்தையை பிரசங்கிப்பதற்கு நீ வெட்கப்படுகின்றாய். உன்னைக் குறித்து உனக்கே வெட்கமாயில்லையா-? நீ உன்னை தேவ ஊழியக்காரனென்றும், தீர்க்கதரியென்றும் அழைத்துக் கொண்டாலும் உன்னுடைய புத்திர சுவீகாரத்தை உலகக் கலப்படத்திற்கு விற்று போடுகிறாய். ஏசா எதை அறுத்தானோ அதையே நீயும் அறுப்பாய் (ஆதி. 27). ஓ, என்னே அவமானம்-! 43. பரிசுத்தமான தேவன் தம்முடைய வார்த்தையின் வெளிப்பாட்டிற்காக அதைக் கண்காணித்து வரும்பொழுது அதற்கு முரணாயுள்ள காரியங்களை எவ்வாறு அவர் ஆசீர்வதிக்கக் கூடும்-? ''வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை'' (மத். 25:35) என்று இயேசு கூறினார். மோவாபை கவனித்துப் பாருங்கள். மோவாபியருக்கும் கூட தேவ வார்த்தை இருந்தது, தேவ பக்தியென்ற வேஷத்தை அவர்கள் தரித்திருந்தார்கள். ஏழு காலங்களையும், ஏழு செம்மறியாட்டுக் கடாக்களையும், ஏழு பலிபீடத்தில் தங்கள் போதகக் குருக்களுடனும், எல்லா மதத்தலைவர்களுடனும் புடைசூழ மகா தேவ பக்தியாய் பலியிட்டார்கள், அதனால் இஸ்ரவேலருக்கு விரோதமாக போர் தொடுக்கையில் தேவனுடைய சமூகத்தில் கிருபை கிடைக்கும் என்று அவர்கள் நினைத்தார்கள். (எண்.22-ம்; 23-ம் அதிகாரம்). ஆனால் இஸ்ரவேலரோ தேசாந்திரி களாய் அங்கே ஒரு சிறியக் கூட்டமாக காணப்பட்டார்கள். ஆனால் இஸ்ரவேலில் காணப்பட்ட ஒரு மேன்மை என்ன-? தேவன் அவர்கள் கூடாரத்தின் மத்தியில் இருந்தார்; தான், அங்கு இருப்பதை நிரூபித்தும் காண்பித்தார். இதை உன்னால் பார்க்க முடிகின்றதா-? இரண்டு பேர் ஒருமனப்பட்டிருந்தர்லொழிய ஒருமித்து நடந்து போவார்களோ என்ற நிலையிலிருக்கும்போது உலக ஐக்கிய சபைகளின் சங்கத்தோடு தேவன் எவ்வாறு ஒத்து இருக்க முடியும்-? கிறிஸ்துவின் சபை (Church of Christ) என்று சொல்லிக் கொள்பவர்கள், பெந்தேகோஸ்தேயினருடன் சேர்ந்து இருக்கிறார்கள். இந்த பெந்தேகோஸ்தேயினர், அன்னிய பாஷை பேசுவதையும், அது தான் பரிசுத்த ஆவி பெற்றதின் அடையாளமென்றும் விசுவாசிக்கின்றனர், அற்புதங்களையும், அடையாளங்களையும் விசுவாசிக்கின்றனர். ஆனால் கிறிஸ்து சபையினரோ, பெந்தேகோஸ்தேயினரைப் பார்த்து, அறிவிலிகளின் கூட்டமே, அற்புதங்களும், அடையாளங்களும் இந்நாளுக்குரியது அல்ல, அந்த நாட்கள் கடந்து போயிற்று,'' என்று கூறுகின்றார்கள், ஆயினும், அவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து இருக்கின்றார்கள். அப்படியானால், அவர்கள் எதைத் தான் செய்து கொண்டு இருக்கிறார்கள்-? ஆம்-! ஒருவருக்கொருவர் பாதுகாப்பைத் தான் தேடிக்கொண்டு இருக்கிறார்கள். இவ்விதமான காரியத்திற்கு விலகியிருங்கள். என்னுடைய பாதுகாப்பு கிறிஸ்துவிடம், அவரின் வார்த்தையிலும் மட்டுமேயுள்ளது, ஏனெனில் அந்த வார்த்தையே தேவனாயிருக்கிறார். இது முற்றிலும் உண்மை . 44. ஜீவனுள்ள தேவனின் அடையாளம் ஒன்றும் அவர்கள் மந்தியில் காணப்பட வில்லை. வார்த்தையை வெளிப்படுத்துவதாக இயேசு கூறினார் (யோவான்.14:21). தேவன், இயேசுவோடு பேசி அவர் மூலம் தீர்க்கதரிசனம் உரைத்திராவிட்டால், அல்லது மேசியாவுக்குரிய செய்கைகளை இயேசுவின் மூலம் செய்திராவிட்டால், அவர்கள், அவரை விசுவாசியாமல் இருப்பதற்கு ஏதுவுண்டு, ஆயினும் தேவனால் அனுப்பப்பட்டவர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் தேவனுடைய வார்த்தையை மறுதலிக்கின்றனர். தேவன் கிருபையாயிருப்பாராக, தேவன் எவ்விதம் அத்தகைய ஒன்றை ஆசீர்வதிக்க முடியும்-? நான் திரும்பவும் எப்பொழுது உங்களிடம் பேசப் போகிறேன் என்று எனக்கு தெரியாது. அது தேவனைப் பொருத்தக் காரியம், எனக்குக் காண்பிக்கப்பட்ட தரிசனத்தில் அவர் எனக்குக் கட்டளை இட்டபடி, ஆவிக்குரிய ஆகாரத்தை நான் பீப்பாக்களில் சேமித்து வைக்கின்றேன். இஸ்ரவேலுக்கு என்ன சம்பவிக்கப்போகிறது என்பதை ஆமோஸினால் எவ்வாறு அறிய முடிந்தது என்று ஒருவேளை நீங்கள் என்னைக் கேட்கலாம். இஸ்ரவேலின் வேதாகமப் பள்ளிகள் எப்பொழுதும் இல்லாவண்ணம் அதிக அலங்காரம் பெற்று இருந்தது. அவர்களுக்கு சங்கடம் விளைவிப்பவர்கள் யாரும் இருக்கவில்லை. யாராகிலும் அவர்களிடம் வந்து, யேகோவாவை தொழுது கொள்ளக் கூடாது என்று தடை விதிக்கவில்லை. புறஜாதிகளும் தொழுகையின் விஷயத்தில் அவர்களுக்கு எந்தவித இடையூறும் தரவில்லை. ஏனென்றால் அவர்களுக்குள் ஒப்பந்தம் உண்டாகி இருந்தது. தீர்க்கதரிசி இந்தக் காரியங்களினூடே அவர்களுடைய நிலைமையைப் பார்த்தான். இன்றைக்கும் தீர்க்கதரிசி நம்மிடையே இருந்தால் நம்முடைய நிலைமையையும் அவ்வாறே காண்பான். ''நாம் உண்டு, குடித்துக் களிப்பாய் இருப்போம்'' என்று இஸ்ரவேலர் கூறினார்கள். அவர்கள் எல்லாரும் ஒருமிக்கக்கூடி தங்களுக்கென்று ஒரு ஸ்தாபனத்தையும், கொள்கைகளையும் கட்டுப்பாடுகளையும் உபதேச சட்டங்களையும் உருவாக்கிக் கொண்டனர். அவர்களின் பெண்கள் அரை நிர்வாணிகளாய் செல்வத்தில் வாழ்ந்தார்கள். அவர்களைப் பற்றியதான சில சரித்திரங்களை நீங்கள் ஆராய்ந்து பார்த்தால், இன்றுள்ள நிலைமைக்கும் அவர்களுக்கும். எந்தவித வித்தியாசமும் இல்லை என்று உங்களால் - அறிந்துக்கொள்ள முடியும். ஓ-! அந்த ராஜாக்களும், போதகர்களும் எவ்வளவு கேவலமாக வாழ்ந்தார்கள்-! 45. மாயக்காரராகிய வேதபாரகரே-! பரிசேயரே-! உங்களுக்கு ஐயோ, மனுஷர் பிரவேசியாதபடி பரலோக ராஜ்யத்தைப் பூட்டிப் போடுகிறீர்கள்; நீங்கள் அதில் பிரவேசிக்கிறதுமில்லை பிரவேசிக்கப் போகிறவர்களைப் பிரவேசிக்கவிடுகிறதும் இல்லை. மாயக்காரராகிய வேதபாரகரே-! பரிசேயரே-! உங்களுக்கு ஐயோ, பார்வைக்கு நீண்ட ஜெபம் பண்ணி, விதவைகளின் வீடுகளைப் பட்சித்துப் போடுகிறீர்கள்; இதினிமித்தம் அதிக ஆக்கினையை அடைவீர்கள்'' (மத்.23:13-14) என்று இயேசு கூறினார். ஆமோசின் நாட்களில் நடந்தது போல இயேசுவின் நாட்களிலும் நடந்தது. இவ்வித சூழ்நிலையைக் கொண்ட ஒரு தேசத்தை தீர்க்கதரிசி அன்று நோக்கிப் பார்த்த பொழுது, அவனுடைய மனம் வேதனைப்பட்டதற்கு எந்தவித ஆச்சரியமுமில்லை. . இனி நிகழப்போவதை ஆமோஸ் எங்ஙனம் முன்னறிந்தான்-? என்று நீங்கள் கேட்கலாம். இஸ்ரவேலருக்கு எல்லாம் சம்பூரணமாயும், நலமாயும் இருந்தது. உண்பதற்கு போதுமான உணவும், உடுப்பதற்கு ஏராளமான உடைகளும், தொழுது கொள்வதற்கு நிறைய ஆலயங்களும் அவர்களுக்கு உண்டாயிருந்தன. அவர்கள் பணத்தினால் செழித்திருந்தார்கள். செல்வமும், ஆடம்பரங்களும், கேளிக்கைகளும் எல்லாத் தேவைகளும் அவர்களுக்கு இருந்தபடியால் எல்லாம் நலமாயிருக்கிறது என்று அவர்கள் நினைத்தார்கள். இன்று அமெரிக்காவும் அப்படித்தான் உள்ளது. தொலைக் காட்சிகளில் ஆபாசமான படங்களும், பெண்கள் அரை நிர்வாணமுமாகக் காட்டப்படுகின்றன. எங்கு நோக்கினும் பாவம் தான் மலிந்து காணப்படுகின்றது. சிறுபிள்ளைகளும், ஆண்களும், பெண்களும், குடித்துக்கொண்டும், புகைப் பிடித்துக் கொண்டும், யேசபேல்களைப்போன்று திரிந்துக்கொண்டு தங்களை கிறிஸ்தவர்கள் என்று கூறிக் கொள்ளுகிறார்கள். அருவருப்பான இந்த ஜனங்கள் தங்களை மெத்தோடிஸ்டுகள் என்றும், பாப்திஸ்துகள் என்றும், பிரஸ்பிட்டேரியன்கள் என்றும், கத்தோலிக்கர்கள் என்றும், பெந்தேகோஸ்தேயினர் என்றும் அழைத்துக் கொள்கின்றார்கள்.' 46. எங்களுக்கு எல்லா வசதிகளும் உண்டு, ஆலயங்களும் உண்டு, அதிகமான செல்வம் உண்டு, இன்னும் அழகான ஆலயங்கள் கட்டுவோம், முக்கியம் வாய்ந்த கட்டடங்களை எல்லாம் நாங்கள் கட்டுவோம், கர்த்தர் எங்களை இவ்விதமாக ஆசீர்வதித்திருக்கிறார் - என்பதை உங்களால் காண முடிய வில்லையா-?'' என்று கேட்பார்கள். ''இல்லை, நீங்கள் தேவனுடைய வார்த்தையை விட்டு விட்டீர்கள்,'' என்று நான் சொல்லுகின்றேன். ''சகோ. பிரான்காமே-! கர்த்தர் இவைகளை அழிப்பார் என்று நினைக்கின்றீரா-?'' "ஆம், உங்கள் ஒவ்வொருவரையும் அழிக்கப்போகின்றார்,'' ''இதை நீர் எப்படி அறிவீர்-?'' ஆமோஸ் தீர்க்கதரிசியே-! இஸ்ரவேல் அழியப்போவதை எப்படி அறிந்தாய்-? ஒரு மருத்துவர் ஒரு நோயாளியை பரிசோதிக்கும் போது, நோயாளி என்ன நோயினால் பீடிக்கப்பட்டு இருக்கின்றார் என்றும், அந்த நோய். எவ்வளவு தூரம் பரவியிருக் கிறது என்பதையும், அதனால் அந்த மனிதனுக்கு விளையக்கூடிய தீமையென்ன என்பதையும் பகுத்தறிகின்றார். அது போலவே தான் ஒரு உண்மையான தீர்க்கதரிசியும். நீ என்ன செய்து கொண்டு இருக்கின்றாய் என்பதைக் குறித்து தீர்க்கதரிசிக்கு கவலையில்லை. பாவம் பெருகுவதை பார்க்கும்போது, புற்றுநோய் எப்படி ஒரு மனிதனை தின்று வருகின்றதோ, அவ்விதம் பாவம் மரணத்தைப் பிறப்பிக்கின்றது என்பதை தீர்க்கதரிசி அறிகின்றான். பெந்தேகோஸ்தேயினரிலும், மற்ற ஸ்தாபனங்களிலும் பாவமானது அவர்கள் மீண்டும் வார்த்தைக்கு திரும்பி வரக்கூடாத நிலையில் காணப்படுகின்றது, அவர்கள், அழிவை நோக்கி சென்றுக் கொண்டு இருக்கின்றார்கள். இப்படித் தான் ஆமோஸ் காரியங்களைப் பகுத்து அறிந்தான். அவன் தேவ வார்த்தையைக் கொண்டு பகுத்து அறிந்தான், ஒரு உண்மையான தீர்க்கதரிசி அவ்வாறே கண்டு பிடிக்கின்றான். 47. நீதிக்கு புறம்பான எந்த பெண்களையும் அவன் எச்சரிக்கின்றான். ஸ்தாபன ங்களில் சேர்ந்துக் கொண்டு தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பலனை மறுதலிக்கின்ற எல்லா போதகர்களையும் அவன் எச்சரிக்கின்றான். தேவனுடைய வார்த்தையைத் தான் எல்லாத் தீர்க்கதரிசிகளும் நோக்கிப் பார்த்தார்கள். தேவ வார்த்தையால் பாவத்தின் தன்மையை நீ அறிய முடியும். அதன் முடிவு மரணம் தான். சில வருடங்களுக்கு முன்பாக, மேற்கு கரையோரத்தில் சில கூட்டங்கள் நான் பிரசங்கிப்பதற்காக சகோ.ராய்-போர்டர்ஸ் ஒழுங்கு செய்து கொண்டு இருந்தார். கூட்டம் நடந்த இடத்தில் ஐம்பது பேர்கள் அடங்கிய ஒரு ஊழியக்காரர் கூட்டத்தை அவர் சந்தித்தார். அவர்கள் சகோதரனைப் பார்த்து. "சகோ.போர்டர்ஸே-! நாங்கள் உம்மிடம் ஒன்று கேட்க விரும்புகிறோம், சகோ. பிரான்காம் ஞானஸ்நானம் கொடுக்கும் போது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தை உபயோகிக் கின்றாரா-?'' என்று கேட்டார்கள் . . அதற்கு சகோதரன் ''ஐயன்மீர், இவ்விதமான வெளிப்புற கூட்டங்களில் சகோ. பிரான்காம் உபதேசத்தைக் குறித்து அதிகமாக பேசுவதில்லை. மாறாக உங்கள் வியாதிகளுக்காக ஜெபிப்பார்,'' என்று கூறினார். 48. அதற்கு அவர்கள், தலைமை போதகர், ''அதை நாங்கள் கேட்கவில்லை, அவர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுக்கிறாரா என்று தான் கேட்டோம்,'' என்றார். அப்பொழுது சகோதரன், ''ஆம், தன்னுடைய சொந்த சபையில், அதை செய்கின்றார். அங்கு மட்டும் தான் ஞானஸ்நானம் கொடுக்கிறார்,'' என்று கூறினார், அதற்கு அவர்கள் ''அதைத்தான் நாங்கள் அறிய முற்பட்டோம், அத்தகைய வேதப் புரட்டன் எங்கள் மத்தியில் வேண்டாம்,'' என்று கூறினார்கள். சில நாட்களுக்கு முன்பாக என் நண்பர் ஒருவருக்கு அவருடைய பாப்டிஸ்டு சபையில் இருந்து ஒரு கடிதம் வந்தது. அதில், 'கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் அவர் ஞானஸ்நானம் எடுத்ததை அடுத்து சபையின் ஐக்கியத்தில் இருந்து அவர் புறம்பாக்கப்பட்டார்,'' என்று எழுதியிருந்தது, நான் பவுல் அப்போஸ்தலனோடு நிற்க ஆசிக்கின்றேன். "உம்மிடத்தில் ஒன்றை ஒத்துக்கொள்கிறேன்; அதென்னவென்றால், இவர்கள் மதபேதம் என்று சொல்லுகிற மார்க்கத்தின்படியே எங்கள் முன்னோர்களின் தேவனுக்கு ஆராதனை செய்து நியாயப்பிரமாணத்திலேயும், தீர்க்கதரிசிகள் புஸ்தகங்களிலேயும் எழுதியிருக்கிற எல்லாவற்றையும் நான் விசுவாசித்து'' (அப், 24:14) என்று பவுல் கூறுகிறார். ஆம், அது தேவனுடைய வார்த்தையே, 49. ஒரு மருத்துவர் வியாதியை அதன் அறிகுறிகளினின்று அது எவ்வளவு தூரம் பரவியிருக்கிறதென்றும் அதற்கு ஏதாகிலும் செய்யக் கூடுமோ என்றும் அறிகிறார். அது போலவே, ஒரு உண்மையான தீர்க்கதரிசி தேவ வார்த்தையைக் கொண்டு பகுத்தறிகின்றான், அதற்கு அவன் மருந்து கொடுக்கும் பொழுது ஜனங்கள் அதை முகத்திலே வீசியெறிகின்றார்கள். பின் சம்பவிப்பது என்ன-? இந்த உலகப் பிரியரான சுகபோக மாய்மாலக் கூட்டத்தார் அழிந்து போவது தவிர வேறு வழியில்லை. 50. அது தான் ஒரு உண்மையான தீர்க்கதரிசியின் வழி. அவன் நோயின் தன்மையைப் பார்க்கிறான். ஜனங்கள் தேவனுடைய வார்த்தையை விட்டு சென்று விட்டதை அவன் காண்கின்றான். தேவ வார்த்தையும் அதின் பலன்களையும் அவன் அறிந்தவனாயிருக்கின்றான். ...''அவர்கள் கர்த்தருடைய வேதத்தை வெறுத்து அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளாமல் தங்கள் பிதாக்கள் பின் பற்றின. பொய்களினால் மோசம் போனார்களே-?'' (ஆமோ. 2:4) என்று தீர்க்கதரிசி அவர்களை நோக்கிக் கூறினான். அதே விதம்தான் மிகாயா என்னும் தீர்க்கதரிசியும் காணப்பட்டான். கர்த்தர் தனக்கு காண்பித்த தரிசனத்தின்படி ஆகாபின் இரத்தத்தை நாய்கள் நக்கும் என்னும் தேவ வார்த்தையைக் கொண்டு அவன் நியாயந் தீர்த்தான். மிகாயா என்னும் இந்த தீர்க்கதரிசியை ஆகாப் ராஜா அழைத்தனுப்பினான். மிகாயா தான் ராஜாவினிடத்திற்கு போகும் முன், ''ஓ கர்த்தாவே, நான் என்ன செய்ய வேண்டும்-? அந்த கூட்டப் போதகர்களுக்கு முன் நான் என்ன சொல்வேன்-? எல்லா ஸ்தாபனமும் ஏறத்தாழ முழு நேரமும் எனக்கெதிராக நிற்கிறார்களே-! நான் என்னத்தை சொல்வேன் ஆண்டவரே-?'' என்று கேட்டிருக்கக்கூடும். பின்பு ஒரு தரிசனத்திற்கு பிறகு, அவன் ராஜாவைப் பார்த்து, 'போம், உமக்கு வாய்க்கும், கர்த்தர் அதை ராஜாவின் கையில் ஒப்புக் கொடுப்பார்,'' என்றான். பின்னும் அவன்; 'இஸ்ரவேலரெல்லாரும், மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப் போல் மலைகளிலே சிதறப்பட்டதைக் கண்டேன். அப்பொழுது கர்த்தர்: இவர்களுக்கு எஜமான் இல்லை; அவரவர் தம்தம் வீட்டிற்கு சமாதானத்தோடே திரும்பக் கடவர்கள் ' என்றார்'' என்று கூறினான். (1 இரா. 22:15-17) அப்பொழுது அந்த தேசத்தின் சபை குருவான, சிதேக்கியா மிகாயாவினிடத்தில் வந்து அவனுடைய கன்னத்தில் அறைந்து, - ''கர்த்தருடைய ஆவி எந்த வழியாய் என்னை விட்டு உன்னோடே பேசும்படி வந்தது, என்றான்'' (1 இரா. 22:24) 51. கர்த்தர் என்ன சொன்னார் என்று உங்களுக்கு தெரியுமா-? அவர்கள் தேவனுடைய வார்த்தையை விட்டதினால் ஒரு பொய்யின் ஆவி அவர்களின் மத்தியில் வருவதற்கு தேவன் அனுமதித்தார். (1.இரா.22:22). ''ஆகையால் சத்தியத்தை விசுவாசியாமல் அநீதியில் பிரியப்படுகிற யாவரும் ஆக்கினைக்கு உள்ளாக்கப்படும்படிக்கு, அவர்கள் பொய்யை விசுவாசிக்கத் தக்கதாகக் கொடிய வஞ்சகத்தைத் தேவன் அவர்களுக்கு அனுப்புவார்,'' (II.தெச 2:11-12) என்று வேதம் கூறுகின்றது. அது தான் இன்றைக்குள்ள ஸ்தாபனங்களில் நடைபெறுகின்ற ஒரு காரியம். ''அவராலேயன்றி வேறொவராலும் இரட்சிப்பு இல்லை''. நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்க ளுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளை இடப்படவும் இல்லை,'' (அப்.4:12) என்று வேதம் கூற, இதற்கு மாறாக அந்த நாமத்தை விசுவாசியாமல் ஒரு பொய்யை ஸ்தாபனத்தார் விசுவாசிக்கின்றார்கள். அதினால் அவர்கள் ஆக்கினைக்குள்ளாகவும் தீர்க்கப்படுவார்கள். ஓ-! ஸ்தாபனங்களே-! உங்களை தேவ வார்த்தையோடு சரிப்படுத்திக் கொள்ளுங்கள். மிகாயாவின் நாட்களில் இருந்த மற்ற தீர்க்கதரிசிகள் எதை நோக்கிப் பார்த்தார்கள்-? அவர்கள், தீர்க்கதரிசிகள் தான்.. அதில் சந்தேகமில்லை; ஆனால் அவர்களோ தங்களுக்கு கிடைத்த : தீர்க்கதரிசனத்தை: வேத வாக்கியங்களோடு ஒத்து பார்த்து இருக்க வேண்டும். இன்றுள்ள மெத்தோடிஸ்டுகள் தங்களுடைய தீர்க்கதரிசனத்தை வேத வார்த்தையோடு ஒத்துப் பார்ப்பார்களேயானால் ஒருபோதும் இனி இன்னொரு மனிதனுக்கு தெளித்தலின் மூலம் ஞானஸ்நானம் கொடுக்க மாட்டார்கள். மாறாக ஒவ்வொருவரும் பரிசுத்த ஆவியைப் பெற்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் முழுக்கு ஞானஸ்நானம் பெற்றுக் கொள்வார்கள். அவ்விதமே, ஐக்கிய கூட்டு சபைகளும், ஒருத்துவக்காரரும், தங்களின் தரிசனத்தை தேவ வார்த்தையோடு ஒத்துப் பார்த்திருப்பார்களேயானால் திரும்பவும் வார்த்தைக்கு வந்து இருப்பார்கள். 52. ஆகாப் ராஜாவினிடத்தில் இருந்த தீர்க்கதரிசிகள் தங்கள் தரிசனத்தை ஆராய்ந்து பார்த்திருக்க வேண்டும். மாறாக தங்களுக்குள் சந்தேகித்து, 'கிலேயாத்திலுள்ள ராமோத் நம்முடையது தானே, யோசுவா நமக்கு அதை தரவில்லையா-?" என்றெல்லாம் ஆலோசித்து முடிவு செய்தார்கள். இவைகளெல்லாம் நியாயமாக இருந்தாலும், தேவ வார்த்தை அதுவாயிருக்கவில்லை. தேவன் என்ன சொல்லுகிறாரோ அதை விசுவாசிக்க வேண்டும். ஆபிரகாம் சந்தேகித்திருந்தால், தன் நாட்டையும், சொந்த ஜனங்களையும் விட்டு வெளி வந்திருக்க முடியுமா-? (ஆதி. 12, 1). மேலும், சரீரம் செத்த அவனுக்கும், அவன் மனைவிக்கும் பிள்ளை பிறந்திருக்க முடியுமா-? (ஆதி.18;10) சந்தேகத்தை தூர எறிந்து போட்டு விட்டு வார்த்தையை விசுவாசியுங்கள். ''சகோ. பிரான்காம் உபதேசங்களில் தவறாக சென்று விட்டார்,'' என்று பிசாசு உன்னிடத்தில் கூறுவான். அதற்கு நீ, 'பிசாசே, சற்று பொறு. நான் வேதத்தை ஆராய்ந்து அவரின் உபதேசம் சரிதானா அல்லது தவறானதா என்று பார்க்கிறேன்,'' என்று கூறலாம். 53. ஆனால் பிசாசோ, “அது தேவையில்லை, அந்தவிதமான காரியத்தை செய்யாதே,'' என்று கூறுவான். மேலும், பிசாசு என்னைக் குறித்து தவறாக உனக்கு சொல்லக்கூடும். இதை செய்ய அவனுக்கு அதிகாரம் உண்டு. பின்பு நீ தானே அந்த விதமான எண்ணங்களின் அலைகளில் அடிபட்டு சீக்கிரமாய் தேவனுடைய வார்த்தைகளை சந்தேகிக்க ஆரம்பிப்பாய். ஆம் சகோதரன் இவ்விதமாய் செய்து இருக்கக் கூடாது தான்,'' என்று நினைத்து நீ என்னை பார்க்கும் பொழுது, என்னை நோக்கி கேட்கத்தக்கதாக அநேக கேள்விகள் உன்னிடத்தில் உண்டாகியிருக்கும், கர்த்தராகிய தேவனுடைய வார்த்தையை நாம் கவனித்து நோக்கவில்லை என்றால், அநேக கேள்விகள் உண்டாவதை பார்க்கலாம். இயேசு பூமியில் வந்தார் என்பதை சற்று மறந்து விடுவோம். கள்ளத்தனமாய் பிறந்த ஒரு சிறுவன் இஸ்ரவேலில் இருந்தான் என்று அந்த தேச முழுமைக்கும் தெரிந்து இருந்தது. அவனுடைய தாய் விவாகம் நடக்கும் முன்பே அவனை கர்ப்பம் தரித்தாள். அது நிரூபனமான ஒன்று. என்றெல்லாம் கூறினார்கள். ஆனால் அவர்கள், ''ஒரு கன்னிகை கர்ப்பவதியாவாள்'' (ஏசா:7:14) என்று தீர்க்கதரிசி கூறின வேத வாக்கியத்திற்கு தங்கள் கவனத்தை திருப்பவில்லை. மாறாக ஜனங்கள் அவரைப் பற்றி கூறின எல்லாவற்றிற்கும் செவி கொடுத்து அதன்படியே நடந்தார்கள். 54. இயேசு செய்ததென்ன-? அங்குள்ள ஒவ்வொரு சபையின் தாறுமாறுகளையும் கிழித்தெறிந்தார். ஒரு வாலிபனாக, எந்த ஸ்தாபனத்தையும் சேராமல் அவர்களுக்கு எதிராக கடிந்து கொண்டவராக சுற்றித் திரிந்தார். அவர்கள், அவரை நோக்கி, 'நீ எந்த சபையை சேர்ந்தவன்-? உன்னுடைய தகப்பன் யார்-? எங்களுக்கு சொல்; யோசேப்பு உன்னுடைய தகப்பன் இல்லையென்று கூறுகிறாயா-?'' என்று அவரைக் கேட்டு இருப்பார்கள். அதற்கு, ''ஆம், யோசேப்பு என்னுடைய தகப்பன் இல்லை,'' என்று இயேசு கூறி இருப்பார். ''நல்லது, அப்படியானால் உன்னுடைய தகப்பன் யார்-?'' என்றிருப்பார்கள். அதற்கு இயேசு, “தேவன் தான் என் பிதா,'' என்று கூறி இருப்பார் . ''ஆ -! மதவெறியனே, நீ மனிதனாயிருக்க, உன் தகப்பன் தேவன் என்றா கூறுகிறாய்,'' என்று அவர்கள் சொல்லி இருப்பார்கள். ''அந்த வார்த்தை மாமிசமானது'' (யோ.1:14) என்ற வார்த்தையை அவர்கள் பரிசீலித்திருந்தால் அறிந்திருப்பார்கள். உன்னால் இதைக் காண முடிகின்றதா-? அவர்கள் தங்கள் தரிசனத்தை தேவ வார்த்தையோடு ஒத்துப் பார்க்கவில்லை. இயேசு அவ்விதமான ஒரு சூழ்நிலையில் தான் காணப்பட்டார். நீயும் கூட அங்கிருந்த தேவ வார்த்தையை ஆராய்ந்து பார்க்காமல் இருந்திருத்தால், ஒரு வேளை இயேசுவை மற்றவர்கள் புறக்கணித்தது போல் புறக்கணித்திருப்பாய். இன்றுள்ள தொல்லை என்னவென்றால், நாம் நம்முடைய தரிசனத்தையும், உபதேசத்தையும் 55. தேவனுடைய வார்த்தையோடு ஒத்துப்பார்ப்பதில்லை. யாராவது ஒரு வேற்று உபதேசத்தைக் கூற முயற்சிக்கும்பொழுது அவரின் பின்னாலே நாம் செல்ல முனைகின்றோம். ஓ பெண்களே-! நீங்கள் மயிரைக் கத்தரிப்பதையும், தாறு மாறாக உடை அணிவதையும் ஏன் தேவ வார்த்தையோடு ஒத்துப் பார்க்கக் கூடாது-? ஜனங்களே-! திரித்துவம் என்று பெயர் பெற்று, பட்டப் பெயர்களான பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே ஞானஸ்நானம் எடுக்கும் கள்ள உபதேசத்தை நீங்கள் ஏன் தேவ வார்த்தையோடு ஒப்பிட்டு பார்க்கக் கூடாது-? ''ஒரே தேவன் மூன்று தொழிலுக்குரிய பட்டங்களையுடையவராக இருக்கிறார்,'' என்பதே உண்மை . பிதா-குமாரன் - பரிசுத்த ஆவி ஒரு நாமமல்ல. பிதா - குமாரன் - பரிசுத்த ஆவியின் நாமம் என்பது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தான். வேதத்தில் ஒவ்வொரு முறையும் எவ்விதம் ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை ஆராய்ந்து பாருங்கள் (மத்.28:18-20, அப்.2:38, அப்.8:16, அப்.19:5). 'உன்னுடைய எண்ணங்களை தேவ வார்த்தையோடு பரிசீலித்துப் பார்ப்பாயேயானால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெறுவதற்கு திரும்பவும் வருவாய், அதைத் தான் பவுலும் செய்யச் சொன்னார்: 'நாங்கள் உங்களுக்கு பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல் நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக் கடவன்'' (கலா. 1:8) என்று கூறினார். 56. தூதர்கள் காணப்பட்ட சமயங்களை பற்றி உங்களுக்கு தெரியுமா-? ஒரு சமயம் பரி.மார்டீனுடைய சமூகத்திற்கு முன்பாக ஒரு பெரிய வெளிச்சம் காணப்பட்டதாம். இந்த மனிதன் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுத்து பரிசுத்த ஆவியை விசுவாசித்த மனிதனாவார். ரோமர்கள் இவரை தங்கள் உபதேசங்களை ஏற்றுக்கொள்ளுமாறு வற்புறுத்தி மிகவும் துன்புறுத்தினார்கள். ஆனாலும் இவர் தேவ வார்த்தைக்காக நின்றார். பிசாசுகளும்கூட இவரிடம் வந்து பேச முற்பட்டதாம். ஆனால் அவைகளொன்றிற்கும், இவர் செவி கொடுக்க வில்லை. ஒரு நாள் பிசாசு கிரீடம் சூட்டப்பட்டவனாய், கால்களில் பொன் பாதரட்சைகளை அணிந்தவனாய் வந்து, இயேசு கிறிஸ்துவைப் போல் தன்னை காண்பித்து, ''மார்டீன், என்னை உனக்கு தெரியவில்லையா-? நான் தான் உன் கர்த்தர், என்னை. தொழுதுகொள்,'' என்றானாம். பரி,மார்டீன் அவனை உற்று பார்த்து ஏதோ தவறு இருக்கிறதை புரிந்துக் கொண்டாராம். 57. இந்த விதமாக பிசாசு மூன்று முறை அவருக்கு தோற்றமளித்து பேசினானாம். மார்டீன் தன்னை சுற்றிலும் பார்த்து, இயேசு கிறிஸ்து தம் வருகையில் தமது ஜனங்களால் கிரீடம் சூட்டப்பட வேண்டியதாயிருக்கிறது என்று உணர்ந்தார். அது மட்டுமல்ல, இயேசு பொன் பாதரட்சைகளை அணிய மாட்டார் என்று உணர்ந்த வராய், பிசாசை நோக்கி, ''அப்பாலே போ சாத்தானே,'' என்று கூறினாராம். ஓ-! இந்த விதமான ஒரு பிரகாசமான தூதன் வேறு யாருக்காகிலும் தோன்றி இருப்பானே ஆனால் அவர்கள் அதன் பின்னே விழுந்து போயிருப்பார்கள்.. சிக்காகோ என்னும் இடத்தில் ஒரு பெண் என்னை நோக்கி 'சகோ. பிரான்காமே-! கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுக்கும்படி, ஒரு தூதன் உமக்கு சொல்லியிருப்பாரானால் இங்குள்ள ஊழியக்காரர்கள் அதை ஏற்றுக் கொள்வார்களாம். ஆனால் இது உம்முடைய சொந்த எண்ணமாய் இருப்பதனால் அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்களாம்,'' என்று கூறினாள். அதற்கு நான், ''ஒரு தேவதூதன் தேவவார்த்தைக்கு முரணாக ஏதாகிலும் சொல்வானே ஆனால், அவன் கர்த்தருடைய தூதனாயிருக்க முடியாது'' என்று கூறினேன். 58. ஒரு மனிதன் தன்னை தேவ ஊழியக்காரன் என்று கூறிக் கொண்டு பட்ட பெயர்களான பிதா-குமாரன்- பரிசுத்த ஆவியின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுப்பது தான் சரி என்று கூறுவானேயானால் அவன் ஒரு பொய்யனாக இருக்கக் கடவன். பெண்கள் மயிரைக் கத்தரிக்கவோ, தலையை மூடிக்கொள்ள தொப்பியை உபயோகிக்கவோ, அல்லது அவலட்சணமான ஆடைகளை அணியவோ, போன்ற காரியங்களை அனுமதிப்பது சரியென்றால் அவன் ஒரு பொய்யனாக இருக்கக் கடவன். தேவனுடைய வார்த்தையே சத்தியமாயிருக்கிறது. இதற்கு மாறானது எல்லாம் பொய்யாக இருக்கக்கடவது. தேவனுடைய வார்த்தையோடு மிகாயாவின் தீர்க்கதரிசனம் ஒத்திருந்த காரணத் தினால் தான், அது தேவனிடத்தினின்று வந்தது என்று மிகாயாவினால் அறிய முடிந்தது. 59. ஆமோஸ் இங்கிருந்திருந்தால் தேவ வார்த்தையுடன் நின்றிருப்பான். அவர்களின் மத்தியில் என்ன சங்கடம் காணப்பட்டதோ, இன்றும் நம் மத்தியிலும் அவ்வாறே உள்ளது. அஸ்திபாரத்தினின்று வழுவ அவர்கள் போதிக்கப்பட்டார்கள். "உங்களுடைய பாரம்பரியத்தினால் தேவனுடைய கற்பனையை அவமாக்கி வருகிறீர்கள்,'' (மத். 15:6) என்று இயேசு கூறினார். தவறான ஞானஸ்நானத்தையும், பரிசுத்தாவிபெறுதலின் தவறான அடையாளத் தையும் கவனித்துப்பார். சிலர்: கை குலுக்கு என்றும், வேறு சிலர் அன்னிய பாஷை பேசு என்றும் கூறுகிறார்கள். பிசாசுகளும் அன்னிய பாஷை பேசி கை குலுக்குகின்றன. ஆம். ஐயா-! அது அடையாளம் அல்ல. இந்தவிதப் பாரம்பரியத்தை உபதேசிப்பாயானால், தேவனுடைய வார்த்தையை விட்டு விலகிப் போவாய். நமது போதகர்கள் தேவ வார்த்தையாகிய அஸ்திபாரத்தினின்று ஜனங்கள் வழுவிப் போகத் தக்கதாக பிரசங்கிக்கிறார்கள். இதைத்தான் அன்றும் செய்தார்கள் அதனால் தான் ஆமோஸ், ''அவர்கள் எந்த தேவனை அறிந்திருக்கிறோம் என்று சொன்னார்களோ, அந்த தேவனே அவர்களை அழிக்கப் போகிறார்,'' என்று கூறினார். 60. பெந்தேகோஸ்தே முற்பிதாக்களுக்கு ஒப்புக் கொடுக்கப்பட்ட விசுவாசமாகிய அஸ்திபாரத்தினின்று வழுவிப் போகத்தக்கதாக நாம் உபதேசிக்கின்றோம். அவ்வாறே பொய்யான உத்தரிக்கும் ஸ்தலம் பற்றியும், தவறான ஞானஸ்நானம் பற்றியும் போதித்து ஜனங்களை உண்மையினின்று திருப்புகின்றோம். உன்னுடைய தவறான திரித்துவக் கொள்கையும், உபதேசங்களும், தெளித்தலின் ஞான ஸ்நானமும் ஆவிக்குரியவைதானா என்று ஆராய்ந்து பார்த்து அதனை களைந்தெறி. அது தான் வழி. 61. ''ஜீவனுள்ள தேவனுடைய சபையானது, அப்போஸ்தலர், தீர்க்கதரிசிகள் என்பவர்களுடைய உபதேசத்தில் கட்டப்பட்டிருக்கிறது,'' என்று வேதம் போதிக்கிறது. இந்த அஸ்திபாரத்தினின்று நாம் வழுவி ஸ்தாபனங்களின் அஸ்திபாரத்திற்கு சென்று விட்டோம். உலகம், உலக இன்பங்கள் என்ற அஸ்திபாரத்தின் மேல் நாம் கட்டப்பட்டவர்களாய் இருக்கிறோம். நீதிகேடு சபைக்குள்ளும் புகுந்து விட்டது. ஒரு சபையானது தன்னை ஸ்தாபித்துக் கொள்ள ஆரம்பித்தவுடனே அது தேவனுடைய வார்த்தையை விட்டு விலகிவிடுகின்றது. உண்மையான அஸ்திபாரமாகிய தேவ வார்த்தையை எங்கு விட்டோமோ, அங்கு திரும்பி செல்வதை தவிர வேறு வழியில்லை. மனந்திரும்புதல் என்றால் "திரும்பி வருதல்'' என்று பொருள்படும். ஆமோஸ் அன்றிருந்த அரசாங்கத்தை குறை கூறவில்லை என்பதை கவனியுங்கள். மாறாக அந்த அரசாங்கத்தை நியமித்த சபையை அவன் குற்றம் சாட்டினான். உலகம் முழுவதும் இந்தச் செய்தியானது ஆழமாய் பதியட்டும். சபையானது யெரோபெயாம் போன்ற ஒரு ராஜாவை தேர்ந்தெடுத்தது. நாமும் கூட இதையே தான் செய்கிறோம். ஜனங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் புதையுண்டு போகிற மணலின் மேல் கட்டப்பட்ட வீட்டை போலிருக்க, அந்த அரசாங்கம் எவ்விதம் கன்மலையின் மேல் வீட்டை எழுப்ப முடியும்-? குறையானது தேசத்தின் மேலும். அதின் ஜனங்கள் மேலுமிருக்க, அரசாங்கம் தான் காரணம். அரசாங்கம் தான் காரணம் என்று குறை கூறாதீர்கள். ஒரு ஊழியக்காரர் என்னிடம் 'சகோ.பிரான்காமே, நீர் கூறுவது சரி என்பதை நான் அறிந்திருக்கிறேன். ஆனால் அவவிதப் பிரசங்கத்தை என் சபையில் நான் பிரசங்கிப்பேன் என்றால் ஸ்தாபனமானது என்னை வெளியே தள்ளிவிடும், பின்பு நான் திரும்பவும் ஒரு பிரசங்கமும் செய்ய முடியாது,'' என்றார். 62. அதற்கு நான் எப்படியாயினும் அதையே பிரசங்கியுங்கள்,'' என்று கூறினேன். ஆம் ஐயா-! அது தேவனுடைய வார்த்தையாய் இருக்கிறது. நீ அதற்கு உத்திரவாதியாய் இருக்கிறாய். நீ ஒரு உண்மையான தீர்க்கதரிசியாய் இருப்பாயே ஆனால் வார்த்தையில் நிலைத்திருப்பாய். இல்லை என்றால் உன்னுடைய ஸ்தாபனத்தில் நிலைத்து இருப்பாய். இதில் எந்தப்பக்கம் இருக்கிறாய் என்பது உன்னைப் பொறுத்த விஷயம். புதையுண்டு போகிற மணலைப் போன்ற உலக உல்லாசங்களின் மேல் வீடானது கட்டப்பட, மக்கள் வாக்களிக்கும் போது அரசாங்கம் ஒரு போதும் கன்மலையின் மேல் தன் வீட்டைக் கட்ட முடியாது. 63. நம்முடைய தொலைகாட்சி நிகழ்ச்சியைப் பாருங்கள். சிரிப்பூட்டும் கலைஞர்கள் எழுந்து நின்று அருவருப்பான சிரிப்புப் பேச்சுக்களை உதிர்க்க நாம் அதை வாஞ்சிக்கிறோம். இரவு நேர ஜெபக் கூட்டங்களுக்கு மக்கள் போவதை விடுத்து அல்லது இப்படக் காட்சியைக் காணத்தக்கதாக சபை போதகர் ஆராதனையைத் துரிதமாய் முடிக்கின்ற நிலைமையாய் உள்ளது. ஐந்து அல்லது ஆறு முறை திருமணம் செய்து, பால் உணர்ச்சியை ஊக்குவிக்கத்தக்கதான உடைகளை அணிந்து ஒரு விபச்சாரி உதிர்க்கும் அருவருப்பான சிரிப்பு பேச்சுக்களை கேட்பதற்கு ஜனங்கள் ஆவலாய் இருக்கின்றார்களே அன்றி தேவனுடைய வீட்டின் மேல் வாஞ்சையாய் இருக்கவில்லை. இது என்ன ஆவி அவர்களுக்குள் இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. இவ்வித தாறுமாறான, நீதிக்குப் புறம்பான காரியங்களை தேசத்தில் இருந்து அகற்ற கோரி ஜனங்கள் பல கோடி கடிதங்களை அரசாங்கத்திற்கு எழுதுவார்களேயானால் அது செய்யத்தக்கதொரு காரியம். மாறாக ஜனங்கள் அதையே வாஞ்சிக்கின்றார்கள். 64. பெந்தேகோஸ்தேயினர் இவ்விதப் படக் காட்சிகளுக்கு செல்லாமலிருப்பது வழக்கமாய் இருந்தது. ஆனால் பிசாசோ, இன்று ஒவ்வொரு வீட்டிலும் ஒரு தொலைக்காட்சி கருவியை வைத்து விட்டான். ஒரு சமயம் என் பிள்ளைகளை அழைத்துவர பள்ளிக்கூடம் சென்றிருந்தேன், அங்கு மற்ற பிள்ளைகளை அழைத்துச் செல்ல அவர்களின் தாய்மார்கள் வந்திருந்தார்கள். அவர்களில் ஒவ்வொரு பெண்ணும், குளிர்காலமாய் இருந்தாலும் அரை குறை ஆடை உடுத்தி இருந்தார்கள். அதுமட்டுமல்ல, துரிதமாய் புகைக்கவும் ஆரம்பித்தார்கள். இதைக் குறித்து ஏதாகிலும் நீ கேட்டால் உன்னிடம் அவர்கள் கோபம் கொள்வது மிகவும் உறுதி. உல்லாசப் பிரியர்களான இந்த பாவிகள் தங்களை கிறிஸ்தவர்கள் என்று கூறிக் கொள்கிறார்கள். அரைகுறையாக ஆடை அணிந்து இந்த இச்சைப்பிரியர்களான பெண்களைப் பார்த்து ஆண்கள் சீட்டியடிக்கின்றார்கள். 65. நம்முடைய முழு அமைப்புகளும் கறைப்பட்டு தாறுமாறாகி விட்டன. ப்ளோரிடா கலிபோஃர்னியா என்னும் இடங்களிலுள்ள விளையாட்டு கூடங்களில் நடைபெறும் சில காரியங்களை பற்றிக் கோள்விப்பட்டேன். அங்கு செல்லும் ஆண்கள் தங்களுடைய வாகனங்களின் சாவிகளை எல்லாம் ஒன்றாகக் குமித்து வைப்பார்களாம். பின்பு பெண்கள் தாமே அங்கு சென்று ஆளுக்கு ஒரு சாவியை எடுத்துக் கொள்வார்களாம். ஒவ்வொரு சாவியும் எந்தெந்த நபருடையதோ அந்த மனிதனுடன் அந்த பெண் சென்று ஒரு வாரக் காலம் ஜீவிப்பாளாம். பின்பு அடுத்த வாரம் அவ்விதமே கூடி அதே காரியத்தை திரும்ப செய்வார்களாம். 66. ஜனங்கள் தேவனுடைய வார்த்தையை விட்டு விட்டார்கள். சுத்தம் என்பது என்னவென்று அறியாதிருக்கிறார்கள். பெண்கள் அவலட்சணமாக இறுக்கமான ஆடைகளை அணிகின்றனர். ஆண்கள் அவர்களைப் பார்த்து இச்சிக்கின்றார்கள். இது நாகரீகம் என்று கருதுகிறார்கள். நீ சரீரப்பிரகாரமாக ஒன்றும் செய்யாதிருந்தும் ஏ, சகோதரியே-! ஒன்றை சொல்ல என்னை அனுமதி. நீ பிசாசின் கையில் ஒரு கருவியாய் இருக்கின்றாய். நியாயத்தீர்ப்பு நாளில் நீ விபசாரப் பாவத்திற்காக பதில் சொல்ல வேண்டும். இதை உணர்ந்து கொள். ஒரு சமயம் ஒரு நல்ல மனிதன் தேவனுக்கென்று ஜீவித்து நல்லதையே செய்ய நினைத்தான். ஆனால் அவனுடைய குடும்பமே நீதிக்குப் புறம்பான சுகபோக பிரியராய் இருந்தார்கள். ஒரு மனிதனுடைய மனைவி அறைகுறை ஆடையணிந்து யேசபேலைப் போன்று வாழ நினைக்கும் போது அந்த மனிதன் என்ன செய்யக் கூடும்-? அவ்விதமாகவே, இந்த மனிதனுடைய மனைவியும், மகள்களும் இருந்தனர். இந்த தகப்பன் தன்னுடைய கடைசி மகனை நல்லபடியாக வளர்க்க நினைத்து அவனை முத்தம் செய்து, அவன் படுக்கப் போகும்போது ஜெபம் செய்து தேவபக்தியாக வளர்த்தான். ஆனால் இன்றோ , அந்த பையன் ''என்னுடைய தகப்பன் ஒரு பைத்தியக்காரன், அவனுடைய நினைவெல்லாம் வேத புத்தகம் தான்'' என்று கூறினான். இந்த மனிதன் இந்தக் குடும்பத்தை குறித்து மேலும் என்ன செய்யக் கூடும்-? அரசாங்கத்தை குறை கூறாதே. இந்த பின் மாற்றக்காரரான சபைகளையும், ஸ்தாபனங்களையும் குறைகூறு. ஏனென்றால் இவர்கள் தாம் அவர்களை நியமித்தார்கள். அவர்கள், எதை விதைத்தார்களோ அதையே அறுப்பார்கள். 67. பணத்தினால் ருஷ்யர்களின் நட்பை பெற நாம் நினைக்கிறோம். கம்யூனிசத்தையும் வாங்க வழி செய்கிறோம், ஆனால் தேவனுடைய வரங்களை பணத்தினால் சம்பாதிக்க முடியாது. மாயவித்தைக்காரனாகிய சீமோன் அவ்விதம் செய்ய நினைத்தான், அவனைப் பேதுரு நோக்கி, ''உன்னுடைய பணம் உன்னோடே நாசமாகக்கடவது' என்று கூறினான்(அப்,8;18-20). நாம் அந்த மனிதனைப் போல் தான் உள்ளோம், தேவனுடைய வார்த்தைக்கு திரும்புங்கள். சரியான மனிதருக்கு வாக்களிப்போம். இஸ்ரவேலர் தன்னை சுற்றியுள்ள அவிசுவாசமுள்ள அண்டை நாட்டினரோடு சம்பந்தம் கலந்திருந்தனர். தங்கள் எதிரிகளோடு சம்பந்தம் கலப்பதற்கு முன் தேவனுடைய வார்த்தையை விட்டு அவர்கள் பிரிந்து போக வேண்டியிருந்தது. அதேபோல் தான் நம் நிலைமையும், ரோம சபை நம்மை அங்கீகரித்துக் கொள்ள நாம் இடம் அளித்து இருக்கிறோம். நம்முடைய எல்லாவற்றையும், எல்லா சபைகளையும் கூட ரோம சபை எடுத்துக் கொண்டிருக்கிறது. அதை 'நாம் பார்த்து பேசாமல் அமர்ந்து இருக்கிறோம். அவ்வித இணைப்பு பாதகமில்லை என்று கூறுகிறார்கள். 68. கம்யூனிசம் உலகத்தை ஆக்கிரமிக்க போகின்றது என்று கூறுகின்றார்கள். அது அப்படியல்ல. ரோம சபை தான் கிறிஸ்துவ மதம் என்ற பெயரால் இந்த உலகத்தை ஆக்கிரமிக்கப் போகின்றது. ஏனெனில் கள்ளக் கிறிஸ்துக்களும், கள்ள தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துக் கொள்ளப்பட்டவர்களை யும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்'' (மத். 21:24) என்று இயேசு கூறினார். நம்முடைய தேவை இன்று ஒரு உண்மையான தீர்க்கதரிசி தான். அவன் நிந்திக்கப் பட்டும், புறம்பாக்கப்பட்டும் காணப்பட்டாலும், நிச்சயமாக எல்லாத் தாறுமாறுகளு க்கும் எதிராகப் பிரசங்கம் செய்வான். தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் கண்டுபிடிக்கும் மட்டும் அவன் தேவனுடைய வார்த்தையை தொடர்ந்து விதைப்பான். தேவனுடைய வார்த்தையின் வியாக்கியானமும், அதன் நிரூபணமுள்ள ஒரு தீர்க்கதரிசி நமக்கு தேவை. இக்கடைசி நாளில் நமக்கு ஒரு தீர்க்கதரிசி மல்கியா 4-ம் அதிகாரத்தின்படி வந்து எல்லாவற்றையும் சீர்ப்படுத்தி சபைகளின் விசுவாசத்தை வேதாகமத்திற்கு திருப்ப வேண்டியதாய் இருக்கின்றது. தேவன் தம்முடைய வார்த்தையை நிறைவேற்றுவார். 69. இஸ்ரவேலின் அவபக்திப்பிரியர்கள் இஸ்ரவேலை அழிப்பார்கள் என்பதை ஆமோஸ் அறிந்திருந்தான். அதுபோல, தங்களுக்கென்று நியமித்துக் கொண்ட ஸ்தாபனங்களும், கொள்கைகளும், உபதேசங்களுமே இன்றுள்ள ஜனங்களை அழிக்கப் போகின்றது. பெந்தேகோஸ்தேயினரே-! இது உங்களுக்குப் பொருந்தும். மிருகத்தின் முத்திரையை தரித்துக் கொள்ளும் அளவிற்கு உன்னை நீயே குருடராக்கிக் கொண்டிருக்கிறாய்; இருந்தாலும் அதை அறியாமல் இருக்கிறாய். ஒன்று அதில் இருக்கவேண்டும், அல்லது வார்த்தையில் இருக்க வேண்டும். கொஞ்சம் அங்கிருந்து பின்பு வந்துவிடுவேன் என்று நீ ஒருவேளை கூறலாம். ஆனால் அது உன்னால் முடியாது. நீ ஏற்கனவே அதற்குள் இருக்கிறாய். மிருகத்தின் முத்திரை உன் மேல் விழுந்துவிட்டது. ஏசா மனங்கசந்து அழுதும், மனந் திரும்புதலைக் காணாமற் போனான், அல்விதமாகத்தான் நீயும். இப்பொழுது தருணம் உண்டாயிருக்கின்றது. அந்த இடத்தை விட்டு புறப்படு. 70. இஸ்ரவேலர் தேவ ஜீவியத்தை விட்டு தங்கள் சொந்த வழியே சென்றார்கள். தேவ வார்த்தை அவர்களுக்கு இடறலாகக் காணப்பட்டது. இன்றும் அவ்விதமே கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக் கொள்ளும் மக்களுக்கு தேவ வார்த்தை ஒரு இடறலாய் இருக்கின்றது. தாங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கிறோம் என்று சொல்வார்கள். ஆனாலும் நடத்தை சரியில்லை . ''அவர்களுடைய கனிகளினால் அவர்களை அறிவீர்கள்-? (மத். 7: 20 ) என்று இயேசு கூறினார். அவர்களுடைய கனிகள் தேவ வார்த்தைக்கு முரணாக காணப்பட்டன. ஆமோஸ் தீர்க்கதரிசி இங்கு இருப்பானானால், இங்குள்ள எல்லா அமைப்புகளுக்கும் எதிராக கதறுவான். 'சிங்கம் கெர்ச்சிக்கிறது, யார் பயப்படாதிருப்பான்-? கர்த்தராகிய ஆண்டவர் பேசுகிறார், யார் தீர்க்கதரிசனம் சொல்லா திருப்பான்-?'' (ஆமோ . 3:8). நான் ஒரு வேட்டைக்காரன், வேட்டையை விரும்புகிறேன். தேவன் அவ்வித வாஞ்சையை எனக்கு தந்ததால் மகிழ்ச்சியுறுகிறேன். சிங்கங்கள் மிகுதியாயுள்ள ஆப்பிரிக்க காடுகளில் நான் வேட்டையாடியிருக்கின்றேன். இரவு வேளைகளில் காடுகளில் தங்கி - பலவிதமான மிருகங்களின் கூப்பாடுகளையும், கூச்சலையும், அலறுதலையும், ஹயேனா (hyena) என்னும் மிருகத்தின் ரத்தத்தை உரையச் செய்யும் சிரிப்பையும், பாபூன், குரங்குகள் இவ்விதம் எல்லா பிராணிகளும் ஆரவாரம் செய்யும் கூக்குரலையும் கேட்டிருக்கிறேன். இப்படி பல கூக்குரல்கள் இருந்தாலும், ஒரு சிங்கமானது கெர்ச்சிக்கும் பொழுது சிறிய வெட்டுக்கிளி கூட தனது சத்தத்தை நிறுத்திக் கொள்ளும். அங்கே ஒரு மரண அமைதி ஏற்பட்டு விடுகிறது. ஏன்-? அவர்களுடைய ராஜா பேசி விட்டார். ஆமென். 71. ஒரு சிங்கம் கெர்ச்சிக்கும் பொழுது யார் பயப்படாதிருப்பான்-? தேவன் பேசும் பொழுது யார் தீர்க்க தரிசனம் சொல்லாதிருக்க முடியும்-? தேவன் பேசும் போது தீர்க்கதரிசி அறை கூவுகின்றான். நான் எதை குறிப்பிடுகிறேன் என்று அறிந்து கொள்ள முடிகிறதா-? ஒரு உண்மையான தீர்க்கதரிசி கூக்குரலிடுகின்றான். ஆகவே ராஜ்யத்தின் எல்லா ஜனங்களும் கவனம் செலுத்தக்கடவர்கள், ஒரு சிங்கமானது ஏதாவது ஒரு சங்கடத்தைக் காணும் பொழுது கெர்சிக்கின்றது. ஆகவே அதன் ராஜ்ஜியத்தின் எல்லா பிராணிகளும் அமைதலாகி விடுகின்றன. ஒரு சிங்கத்தை தன் துதிக்கையால் தூக்கியெறியக் கூடிய வலிமைப் படைத்த யானையும் இந்த கெர்சிப்பைக் கேட்டவுடன் அமைதலாகின்றது. நாசியில் அனலென காற்றை வீசும் முரட்டு காட்டெருமையும், ஏழு டன் நிறையின் இரும்பையும் துளைக்கக் கூடிய கூர்மையான கொம்பையும் வலிமையையும் உடைய காண்டா மிருகமும் கூட சிங்கம் கெர்சிக்கும் பொழுது தங்கள் தங்கள் பாதையில் நின்று அமைதலாகின்றன. ஏன்-? அவர்கள் ராஜா பேசினார். உன்னால் காண முடிகின்றதா-? மேலும் என்ன சொல்லப்படப் போகின்றது என்பதை கவனிக்கின்றன. 72. தேவன் பேசும் போது தீர்க்கதரிதி அறை கூவுகின்றான். ஆகவே, தேவனுடைய ராஜ்யமானது அமைதலாயிருந்து அவருக்கு செவி கொடுப்பதாக. தேவன் பேசினார். ஆகவே, ராஜ்யத்தில் உள்ளவர்கள் கவனித்து அவர் என்ன சொல்கிறார் என்று செவி கொடுப்பார்களாக. - ஆமென்…